இரண்டு குழுக்களுக்கிடையில் கடந்த 20ம் திகதி மதுபோதையில் இடம்பெற்ற பிரச்சினையின் போது துப்பாக்கிச் சூடு இடம்பெற்றமை தொடர்பாக கைதான ஐவரையும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (ரிஐடி) விசாரணைக்காக பொறுப்பேற்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக முதலில் கடந்த 21ம் திகதி துப்பாக்கி சூடு நடத்திய சந்தேகநபர் ஒருவர் கைதான நிலையில் சந்தேகநபரின் வாக்குமூலத்திற்கு அமைய 4 பேரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இந்தக் கைது நடவடிக்கையை நீதிமன்ற உத்தரவிற்கமைய சம்மாந்துறை குற்றப்புலனாய்வுப் பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் முன்னெடுத்த நிலையில் தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் கைதான பிரதான சந்தேகநபருடன் நெருங்கிப் பழகிய அப்பகுதி இராணுவ கப்டன் தர அதிகாரிக்கு தற்போது வடபகுதிக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இராணுவ அதிகாரிக்கு பிரதான சந்தேகநபர் மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் கொள்வனவு செய்து கொடுத்துள்ளதுடன் அவ்வப்போது பல்வேறு உதவிகளையும் செய்துள்ளார்.
மேற்படி சம்பவத்தில் கைதானவர்கள் அனைவரும் 26, 38, 42, 40 மற்றும் 27 வயதினை உடையவர்களாவர்.