வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் 20 நாட்களுக்கு பின் பொது வெளியில் தோன்றிய நிலையில், முதன் முறையாக அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கிடையில், வடகொரியா அதிபர் உடல் நிலைப் பற்றி தான் கடந்த 20 நாட்களாக சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
அவரின் இறப்பு தகவல், கடந்த 11-ஆம் திகதிக்கு பின் பொது வெளியில் தென்படாமல் இருந்தது போன்றவை வதந்திகள் தொடர்வதற்கு காரணமாக இருந்தது.
இந்நிலையில் சில மணி நேரங்களுக்கு முன்பு அதிபரின் இறப்பு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் உயிருடன் இருப்பதாகவும், பொது வெளியில் தென்பட்டதாகவும், வடகொரியா அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் அது தொடர்பான எந்த ஒரு புகைப்படங்களும் வெளியாகமல் இருந்தது. தற்போது அதையும் நிரூபிக்கும் வகையில் தொழிற்சாலைக்கு வந்த கிம் ஜாங் உன்னின் புகைப்படங்களை முதல் முறையாக வடகொரியா அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
நகரில் இருக்கும் ஒரு உரத் தொழிற்சாலை துவக்க விழாவில் ரிப்பன் வெட்டுவது போன்றும், அதன் பின் தொழிற்சாலை உள்ளே சக அதிகாரிகளுடன் கிம் இருப்பது போன்றும், புகைப்ப்படங்கள் வெளியாகியுள்ளது.
குறிப்பாக இந்த தொழிற்சாலை திறப்பின் போது, அங்கிருந்த மக்கள், கிம்மை உற்சாகப்படுத்தும் வகையில் முழக்கமிட்டு, பலூன்களை பறக்கவிட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.
கிம் உடன் அவரது மூத்த சகோதரி கிம் யோ ஜாங் உட்பட பல மூத்த கொரிய அதிகாரிகள் இருந்ததாக கே.சி.என்.ஏ தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.
இதன் மூலம் கிம்மின் இறப்பு செய்திக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகைப்படங்கள் சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.