கொரோனா வைரஸ் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவின் கோரிக்கையை, அவுஸ்திரேலியா ஆதரித்துள்ளதால், சீனா அந்நாட்டிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவின் பிறப்பிடம் என்று கூறப்படும் கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் கதிகலங்க செய்துள்ளது.
இதுவரை உலகளவில் சுமார் 34-லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கிறது.
இந்நிலையில், அமெரிக்கா சீனா உலகில் கொரோனாவை பரப்பியதால் 184 நாடுகள் நரக வேதனை அனுபவித்து வருவதாகவும், இதற்காக சீனாவுக்கு எதிராக மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியது வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க செனட் சபையினரும் சீனாவுடனான வர்த்தக சார்பைக் குறைத்துக் கொள்ள நடவடிக்கை தேவை என்று டிரம்புக்கு நெருக்கடி அளித்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி கொரோனா வைரசை, பல்வேறு நாடுகளுக்கும் சீனா பரப்பி விட்டதாகவும், இந்த விவகாரத்தில், சீனாவுக்கு ஆதரவாக, உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டதாகவும், அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.
அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு அவுஸ்திரேலியாவும் ஆதரவு தெரிவித்துள்ளதால், சீனாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது சீனா குறித்த விசாரணை தேவை என்ற ரீதியில் அமெரிக்காவுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியா பேசியுள்ளது.
இது தொடர்பாக சீனா கூறுகையில், சீனா சிறுமைத்தனமான தந்திரங்களை மேற்கொள்ளாது. இது எங்கள் மரபு கிடையாது.
ஆனால் மற்றவர்கள் செய்தால் நாங்கள் திரும்ப பதிலடி கொடுப்போம். சீனாவின் நுகர்வோர்கள் அவுஸ்திரேலியப் பொருட்களை கைவிடுவார்கள். பல்கலைக் கழகங்களும் சிக்கலாகும், சீன மாணவர்களும், சுற்றுலா பயணியரும், அவுஸ்திரேலிய வருவதை புறக்கணிப்பர்.
அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டு இறைச்சி மற்றும் மது வகைகளுக்கு சீனா தடை விதிக்கும் என பகிரங்கமாக எச்சரித்துள்ளது.