கொரோனா வைரஸுடன் மருத்துவமனையில் தீவிரமாக நோய்வாய்ப்பட்டிருந்தபோது பிரித்தானியா அரசு தனது மரணத்திற்கு ‘தற்செயல் திட்டங்கள்’ வகுத்ததாக பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளிப்படுத்தியுள்ளார்.
பிரித்தானியா பிரதமர் ஜான்சன் மார்ச் 26 அன்று கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடுத்த நாள், அவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார்.
தற்போது குணமடைந்த போரிஸ் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தன்னை உயிருடன் வைத்திருக்க லிட்டர் கணக்கில் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டதாக கூறினா்.
ஒரு சில நாட்களில் எனது உடல்நிலை இந்த அளவுக்கு மோசமடைந்தது என்பதை நம்பமுடியவில்லை. நிலைமை மோசமடைந்தால் என்ன செய்வது என்பதற்கான அனைத்து வகையான ஏற்பாடுகளையும் மருத்துவர்கள் செய்துக் கொண்டிருந்தனர்.
நான் நோயிலிருந்து மீண்டது அற்புதமானது, அற்புதமான நர்சிங் முக்கிய காரணம்.பலர் இன்னமும் கஷ்டப்படும் நிலையில், தான் நோயிலிருந்து மீண்டதால் அதிர்ஷ்டசாலி என்று உணர்ந்ததாக ஜான்சன் கூறியுள்ளார்.
மற்றவர்கள் துன்பப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்கும், பிரித்தானியாவை இயல்பு நிலைக்கு திரும்பப் பெறும் விருப்பத்தின் உந்துதல் தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப வைத்ததாக கூறியுள்ளார்.