சுவிட்சர்லாந்தில் போட்டிக்கு உணவகம் திறந்த ஆத்திரத்தில், தந்தையும் இரு மகன்களும் சேர்ந்து உணவ உரிமையாளர் ஒருவரை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் துர்ன் பகுதியில் துருக்கி நாட்டவர் ஒருவர் தமது சகோதரர் மற்றும் தந்தையின் உதவியுடன் கெபாப் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
குறித்த கடையில் பணியாற்றி வந்த துருக்கியர் ஒருவர், குடும்ப சூழல் காரணமாக தனித்து ஒரு கெபாப் கடையை திறக்க திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையில் இறங்கினார்.
மட்டுமின்றி மிக விரைவில் கெபாப் கடை ஒன்றையும் இதே தெருவில் திறந்துள்ளார். இது முன்னாள் உரிமையாளர்களுக்கு ஆத்திரத்தை அளித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பில் அந்த தந்தையும் அவரது இரு மகன்களும் இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டுமின்றி அந்த இடத்தில் இருந்து வெளியேற முயன்ற துருக்கியரை, தந்தையும் இரு மகன்களும் சேர்ந்து கத்தியால் கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியுள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான 37 வயது நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் பாதிக்கப்பட்டவருக்கு 45,000 பிராங்குகள் இழப்பீடாக அளிக்கவும் விதிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி நீதிமன்ற செலவீனங்களுக்கு என 17,450 பிராங்குகள் செலுத்தவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பாகியுள்ள நபரின் தந்தையும் சகோதரரும் நிரபராதி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் இதுவரை இருவரும் சிறையில் விசாரணை கைதிகளாக இருந்தமையால், 65 வயதான நபருக்கு இழப்பீடாக 36,150 பிராங்குகளும் 85 நாட்கள் சிறையில் இருந்த அவரது மகனுக்கு இழப்பீடாக 17,000 பிராங்குகளும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.