பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் கருப்பினத்தவர்களை அதிகம் பாதிக்கும் ஆபத்து உள்ளதாக அங்குள்ள அரசு தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் தற்போது வரை 206,715-பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 30,615-பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பாவை பொறுத்தவரை கொரோனாவால் உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் பிரித்தானியா முதல் இடத்தில் உள்ளது.
முதலில் இந்த வைரஸ் அதிக வயதுடைய அதாவது 60 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகமாக தாக்குவதாகவும், குறித்த வயதுடைய மக்கள் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதன் பின் இந்த வைரஸ் வயதானவர்களை மட்டுமின்றி, குழந்தைகளையும் தாக்குவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, நாட்டில், வெள்ளை நிறத்தவர்களை விட இந்தியர்கள், பாகிஸ்தானியர், வங்கதேசம் மற்றும் அங்கு வசிக்கும் கறுப்பின மக்களுக்கு கொரோனா ஆபத்து 4 மடங்கு அதிகம் என அரசு தேசிய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
கறுப்பின மக்களைப் பொறுத்தவரை வெள்ளைநிறத்தவரை விட ஆண்களில் 4 புள்ளி 2 மடங்கும், பெண்களில் 4 புள்ளி 3 மடங்கும் கொரோனா ஆபத்து அதிகம் என அது எச்சரித்துள்ளது.
இதே போன்று இந்தியர்கள் மற்றும் கலப்பின மக்களுக்கு தொற்று எளிதில் பரவுவதாகவும், அவர்களிடையே இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதாகவும் தேசிய புள்ளியியல் நிறுவனம் கூறியுள்ளது.