தென்னாப்பிரிக்காவில் குடியிருப்பில் தாமாகவே தயாரித்த மது அருந்திய தம்பதி வலியால் துடித்து இறந்த சம்பவம் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்துப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனால் மதுப்பிரியர்கள் தாமாகவே குடியிருப்பில் பீர் தயாரித்து அருந்தி வருகின்றனர். இந்த நிலையில், தாமாகவே மது தயாரித்து அருந்திய தம்பதி பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
வடக்கு கேப் மாகாணத்தில் போர்ட் நோலோத் பகுதியில் குடியிருந்துவந்த டோனி ஹில்லியார்(54), மற்றும் அலிடா ஃபவுச்(42) தம்பதி தங்களிடம் இருந்த மது போத்தல்கள் காலியான நிலையில், தாமாகவே மது தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவத்தன்று தாங்கள் தயாரித்த மதுவில் ஆளுக்கு ஒரு போத்தல் அருந்தியுள்ளனர்.
இதில் அந்த மது அவருக்கு ஒத்துக்கொள்ளாத நிலையில் சம்பவயிடத்திலேயே அலிடா பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
இதனிடையே உடல் வலியால் துடித்த டோனி, அவசர உதவிக்கு அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும் மருத்துவ உதவி குழுவினர், டோனி மற்றும் அலிடாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி டோனியும் மரணமடைந்துள்ளார். பொலிசார் மேற்கொண்ட சோதனையில், குடியிருப்பில் இருந்து சில மது போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் மதுவில் கலந்திருந்த விஷத்தன்மையாலையே இருவரும் பாதிப்புக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளது தெரியவந்தது.
டோனி மற்றும் அலிடா மறைவுக்கு அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, கடந்த மார்ச் 26-ல் இருந்தே தென்னாப்பிரிக்காவில் ஊரடங்கும், மது விற்பனை, வாங்குவது உள்ளிட்ட அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
தற்போது 6 வாரங்கள் கடந்த நிலையில், 58 மில்லியன் எண்ணிக்கை கொண்ட மக்கள் தொகையில் பெரும்பாலானோர் மதுவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே சாலை மார்கம் போக்குவரத்து தடை செய்துள்ளதால் பீர் நிறுவனம் ஒன்று தாங்கள் தயாரித்த 400 மில்லியன் போத்தல் பீரை கழிவுநீர் ஓடையில் கொட்ட வேண்டிய சூழல் இருப்பதாக அறிவித்துள்ளது.