கொரோனா வைரஸ் கண்கள் வழியாகவும் பரவலாம் என்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
பொதுவாக, கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கவேண்டுமானால், அவரது உடலில் அந்த வைரஸை ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயம் இருக்கவேண்டும்.
அறிவியல் ரீதியாக கூறினால், ACE-2 receptors என்ற என்சைம் எங்கு இருக்கிறதோ, அந்த வழியாகத்தான் இந்த கொரோனா வைரஸ் உடலுக்குள் நுழையும்.
ஆகவே, இந்த ACE-2 receptors என்ற என்சைம் இருக்கும் இடம், உடலிலுள்ள செல்களின் வாசல் என்று அழைக்கப்படுகிறது.
இந்த என்சைம், சுவாசக் குழாய் மற்றும் நுரையீரலில் பொதுவாக காணப்படுவதுண்டு. ஆனால், அதே என்சைம் கண்களிலும் உருவாக்கப்படுகிறது என்ற உண்மையை, அமெரிக்காவின் Johns Hopkins பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்களை தலைமையாகக் கொண்ட ஒரு குழு கண்டறிந்துள்ளது.
இதன் பொருள் என்னவென்றால், கொரோனா தொற்றிய ஒருவர் தும்மும்போது தெறிக்கும் எச்சில் துளிகள் மற்றொருவரது கண்ணில் படுமானால், அவருக்கும் கொரோனா தொற்ற வாய்ப்புள்ளது.
கொரோனா நோயாளிகளை ஆராய்ந்தபோது, அவர்களில் சிலருக்கு கண் நோய் (conjunctivitis) இருந்ததற்கான காரணம் இப்போதுதான் தெரியவந்துள்ளது.
இன்னொரு விடயம், கொரோனா வைரஸ், கண்கள் வழியாக பரவுவது மட்டும் அல்லாமல், ஒருவரது கண்ணீர் மூலமாகவும் பரவலாம் என்பதும் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.