கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்கள் அவரின் சொந்த கருத்து தனிப்பட்ட கருத்து, அதை கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கை தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எடுத்துக்கொள்ள முடியாது என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நான் ஆயுதப்போராட்டம் ஒன்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை அதன் காரணமாகத்தான் நான் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டத்தையும் ஏற்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் சிங்கள இணைய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய சிங்கள செவ்வியில் கூறியிருந்தார்.
இதைக் கண்டித்தும் சுமந்திரனுக்கு எதிராகவும் கூட்டமைப்பிற்குள்ளும் தமிழரசுக் கட்சிக்குள்ளும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் அவை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எம்.ஏ.சுமந்திரன் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தமிழர்களின் ஆயுதப்போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களை நான் இன்னமும் முழுமையாக பார்க்கவில்லை.
எனினும் அவரின் தனிப்பட்ட செவ்வியை, அவரின் சொந்தக் கருத்துக்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடாகவோ அல்லது இலங்கை தமிழரசுக் கட்சியின் கருத்தாகவோ எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.