சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட நிறுவனத்தின் சீஸ் சாப்பிட்ட நால்வர் லிஸ்டீரியா பாதிப்புக்கு இலக்கான நிலையில், அதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட உணவு பாதுகாப்பு நிர்வாகம், குறித்த நிறுவனத்தின் 26 வகையான சீஸ்களை பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என அறிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் வலாய்ஸ் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள் நால்வருக்கே சீஸ் சாப்பிட்டதால் லிஸ்டீரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த நபர் ஒருவர் மரணமடைந்த நிலையில், மூவர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வலாய்ஸ் மருத்துவமனையில் மார்ச் 30 முதல் மே 2 வரையான காலகட்டத்தில் நான்கு பேருக்கு லிஸ்டீரியா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதனையடுத்து மே 5 ஆம் திகதி குறிப்பிட்ட நிறுவனத்தின் சீஸ் தொடர்பில் சுவிஸ் உணவு பாதுகாப்பு நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் Steinerberg பகுதியில் அமைந்துள்ள Vogel சீஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளே லிஸ்டீரியா பாதிப்புக்கு காரணம் என தெரியவந்தது.
இதனிடையே குறித்த சீஸ் தொழிற்சாலை தனது வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளித்து, தங்களது தயாரிப்புகளை அப்புறப்படுத்தவும் கோரிக்கை விடுத்தது.
மட்டுமின்றி தொடர்புடைய நிறுவனம் மத்திய சுவிட்சர்லாந்தின் அனைத்து மண்டலங்களையும் இந்த விவகாரம் தொடர்பில் எச்சரித்தது.
இந்த நிலையில் Vogel சீஸ் நிறுவனத்தின் 26 தயாரிப்புகள் பயன்பாட்டுக்கு உகந்ததல்ல என சுவிஸ் உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
இருப்பினும் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன், குறித்த சீஸ் நிறுவனத்தை செயல்பட சுவிஸ் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.