கொரோனா வைரஸ் தொடர்பில் சீனா- வுஹான் வைரஸ் ஆய்வகம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் குறிவைக்கப்பட்டு வரும் நிலையில், புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா பரவலால் நிலைகுலைந்து போயுள்ள அமெரிக்கா, வுஹான் ஆய்வகம் தொடர்பிலும், இது மனிதனால் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதமா என்பது தொடர்பில் விசாரணை முன்னெடுக்க உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், வுஹான் ஆய்வகத்தின் தலைவர், தற்போது உரிய விளக்கமளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் போன்ற எவ்வித ஆபத்தான கிருமிகளையும் வுஹான் ஆய்வகம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், வுஹான் ஆய்வகத்தில் என்ன வகையான ஆராய்ச்சி நடக்கிறது என்பதையும், வைரஸ்கள் மற்றும் மாதிரிகளை ஆய்வகம் எவ்வாறு நிர்வகிக்கிறது என்பதையும் நாங்கள் தெளிவாக அறிவோம் என ஆய்வகத்தின் துணை இயக்குனர் யுவான் ஜிமிங் தெரிவித்துள்ளார்.
ஆய்வகத்தின் பாதுகாப்பு தொடர்பில் எங்களுக்கு உரிய நெறிமுறைகள் உள்ளன. அதை நாங்கள் தவறாமல் கடைபிடித்து வருகிறோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, என்.பி.சி செய்தி நிறுவனம் முன்னெடுத்த விசாரணையில், வுஹான் ஆய்வகம் அக்டோபர் மாதத்தில் குறிப்பிட்ட காலம் மூடப்பட்டிருந்ததாகவும்,
இதுவே அங்கு ஒருவித ‘அபாயகரமான நிகழ்வு’ நடந்திருக்கலாம் என்பதைக் குறிக்கிறது எனவும் தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும், ஆய்வகத்தில் ஏதேனும் முரண்பாடுகள் இருப்பதைக் குறிக்கும் தரவுகளுக்காக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சேகரிக்கப்பட்டவற்றை ஆய்வாளர்கள் இப்போது ஆராய்ந்து வருகின்றனர் என்று சில அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.