ரஷ்யா தமது அரசியல் முடிவுகளை சீர்குலைக்க கடினமாக முயன்று வருவதற்கான ஆதாரங்கள் தம்மிடம் சிக்கியுள்ளதாக ஜேர்னம் சேன்ஸலர் மெர்க்கல் கொந்தளித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஜேர்மன் பாராளுமன்றத்தில் பேசிய மெர்க்கல், உண்மையில் ரஷ்யாவின் இந்த செயல் எனக்கு வேதனையை அளித்திருக்கிறது.
ஒவ்வொரு நாளும் நான் ரஷ்யாவுடன் ஒரு சிறந்த உறவை உருவாக்க முயற்சிக்கிறேன், மறுபுறம் ரஷ்ய படைகள் இதைச் செய்கின்றன என்பதற்கு இதுபோன்ற கடினமான சான்றுகள் உள்ளன என்றார்.
ஜேர்மனியில் இருந்து வெளியாகும் Der Spiegel பத்திரிகையானது கடந்த வாரம் செய்தி தொகுப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், ரஷ்யாவின் GRU ராணுவ உளவு அமைப்பானது, கடந்த 2015 ஆம் ஆண்டு மெர்க்கலின் பாராளுமன்ற தொகுதி அலுவலகத்தில் ஊடுருவி அவரது மின் அஞ்சலில் நகல்கள் எடுத்துள்ளது என தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் சந்தேக நபரை அடையாளம் காணப்பட்டதாக கூறும் மெர்க்கல்,
துரதிர்ஷ்டவசமாக நான் எட்டிய முடிவு என்பது எனக்கு புதியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
மெர்க்கல் மேலும் கூறியதாவது, ‘ரஷ்யாவுடன் நல்ல உறவை பேண நான் பாடுபடுவேன், ஏனென்றால் எங்கள் இராஜதந்திர முயற்சிகளைத் தொடர எல்லா காரணங்களும் இருப்பதாக நான் நினைக்கிறேன், ஆனால் அது இனிமேலும் எளிதாக இருக்காது என்றார்.’
மெர்க்கலின் இந்த குற்றச்சாட்டுக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் ஜேர்மன் உளவு அமைப்பு, ரஷ்யாவின் இந்த நடவடிக்கை புதிதல்ல என தொடர்ந்து கூறி வருகிறது.
சேன்ஸலர் மெர்க்கலுக்கும் இதுபோன்ற ஊடுருவலுக்கு இலக்காவது முதன் முறையல்ல. கடந்த 2013 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான பாரக் ஒபாமாவுடன் பேச்சுவார்த்தையில் இருந்த போது,
அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் தனது மொபைல் போனை ஊடுருவியதாக செய்தி வெளியாகியிருந்தது.
தொடர்ந்து ஒரு நிபுணர்கள் குழுவை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த சேன்ஸலர் மெர்க்கல், குற்றச்சாட்டுகள் கடுமையானவை, அவற்றை கண்டிப்பாக தெளிவு படுத்த வேண்டும் என காட்டமாக தெரிவித்திருந்தார்.