உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வழக்கமான மருத்துவ சேவைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த 6 மாதங்களில் 12 லட்சம் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது.
மேலும், தடுக்கக் கூடிய நோய்களைக் கூட தடுக்க முடியாமல் இந்த மரணங்கள் நிகழும் என்றும்,
இவற்றைத் தடுக்க அரசாங்கங்கள் அவசர கதியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று யூனிசெஃப் வலியுறுத்தியுள்ளது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பர்க் பொதுச் சுகாதார மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்தக் கணிப்பையும் எச்சரிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.
118 நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் நாடுகளில் 3 மோசமான சூழ்நிலைகளை அடையாளப்படுத்திய இந்த ஆய்வு,
அடுத்த 6 மாத காலகட்டத்தில் கொரோனா மரணங்கள் அல்லாது 5 வயதுக்குட்பட்ட 12 லட்சம் குழந்தைகள் மரணமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.
வழக்கமான மருத்துவச் சேவைகள் கொரோனாவினால் பாதிப்படைந்துள்ளதால் இந்த மரணங்கள் ஏற்படலாம் என்கிறது இந்த ஆய்வு.
இந்த 118 நாடுகளில் ஏற்கெனவே 25 லட்சம் குழந்தைகள் 5 வயதை எட்டும் முன்னரே பலியாகியுள்ள நிலையில் இந்த கூடுதல் மரணங்கள் ஏற்படலாம் என்று கணிக்கிறது.
வரும் 6 மாதங்களில் 56,700 தாய்மார்களும் குழந்தைப் பிறப்பு தொடர்பான சிக்கல்களினால் மரணமடையலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே ஆரோக்கிய, சுகாதார, மருத்துவ அமைப்புகள் பலவீனமடைந்துள்ள இந்த 118 நாடுகளில் கொரோனா தாக்கம் மருத்துவ அமைப்புகளை ஆட்டம் காண வைத்துள்ளது. நிதி மற்றும் மனித வள ஆதாரங்களையும் இடையூறு செய்துள்ளது.
ஊரடங்குகளினால் மருத்துவமனைக்கும், சுகாதார நிலையங்களுக்கும் செல்லும் நடவடிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
இந்த இடையூறுகளினால் தாய்மார்களும் குழந்தைகளும் அதிக அளவில் மரணமடைவதை நாம் தடுத்தாக வேண்டும் என்கிறது யூனிசெஃப்.