ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவேனியாவில் புதிய கொரோனா நோய்த் தொற்று இல்லாததால் தனது எல்லைகளைத் திறந்துள்ளது.
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியா, மலைகள், ஸ்கை ரிசார்ட்ஸ் மற்றும் ஏரிகள் உள்ளிட்டவைகளுக்கு உலக அளவில் மிகவும் பெயர் பெற்றது.
ஐரோப்பிய நாடுகள் மொத்தம் கொரோனாவால் தள்ளாடி வரும் நிலையில் ஸ்லோவேனியா தனது எல்லைகளைத் திறந்துள்ளது.
இந்த நாடு கொரோனா பரவலை மிகச் சிறப்பாகக் கையாண்டதால் புதியதாக ஒரு நோய்த் தொற்றுகூட இல்லை என்ற நிலையை எட்டியது, ஆகவே ஸ்லோவேனியா இன்று தனது எல்லைகளைத் திறந்துவிட்டுள்ளது.
இந்நிலையில் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தியது குறித்துப் பேசிய அந்நாட்டின் பிரதமர் ஜானெஸ் ஜான்சா, “ஸ்லோவேனியாவில் பெருந்தொற்றின் கட்டுப்பாடு மிகச் சிறப்பாக உள்ளது.
ஆகவே இது சமூக தொற்றைத் தடுக்க எங்களுக்கு உதவி இருக்கிறது என்று கூறியுள்ளார். ஏறக்குறையை கொரோனா தொற்றுநோய் அறிவிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்தத் தகவலை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இத்தாலியின் எல்லையிலுள்ள ஸ்லோவேனியா இரண்டு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு மலை நாடு. நேற்றைய நிலவரப்படி சுமார் 1,500 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 103 இறந்துள்ளனர்.
ஆனால் புதிய நோய்த் தொற்றுகளின் விகிதம் மிகவும் பின்தங்கியுள்ளதால் எல்லைகளைத் திறக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி நாடுகள் தங்கள் எல்லைகளை திறப்பு தொடர்பில் ஒருமித்த கருத்துக்கு எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.