கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட அச்சத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை படிமுறை படிமுறையாக தளர்த்தி பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள பின்னணியில், கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்ட நாட்டின் அனைத்து பகுதிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது கொரோனா பரவல் அச்சம் காரணமாக முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட எந்த பகுதிகளும் இல்லை என கொரோனா பரவலை கட்டுப்படும் தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவரும், பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
எவ்வாறாயினும் முடக்கப்பட்ட பகுதிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பூரண தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேல் மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, மாவட்டங்களில் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பூரண ஊரடங்கு அமுலில் உள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் இறுதியாக 11 சிறு பிரதேசங்கள் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவை தற்போது முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி கொழும்பு மாவட்டத்தின் 6 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட 8 சிறு பகுதிகளும் கம்பஹா மாவட்டத்தின் 3 பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட 3 சிறு பகுதிகளும் இவ்வாறு முடக்கப்பட்ட பகுதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவித்தன.
கொழும்பின் வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் 66,146 ஆம் தோட்டங்கள், கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில் ஒரு தோட்டப்பகுதி, கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் பண்டாரநாயக்க மாவத்தை, நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவின் தாபரே மாவத்தை, தேசிய சந்தைப் பகுதி, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் நாகலகம் வீதி,
முகத்துவாரம் பகுதியில் ஒரு தொடர்மாடி குடியிருப்பு இந்த வாரம் முடக்கப்பட்ட பகுதிகளாக இருந்த நிலையில் அவை நேற்று இரவு முதல் முடக்கப் பகுதிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்தனர்.
அத்துடன் அப்பகுதிகள் முடக்கம் மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டதை கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி விஷேட வைத்திய நிபுணர் ருவன் விஜயமுனியும் உறுதி செய்தார்.
கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல பொலிஸ் பிரிவில் சுதுவெல்ல, மீகஹவத்த பகுதியின் உடுபில வடக்கு, சமன்பாயவத்த ஆகிய பகுதிகளும் முடக்கம் மற்றும் தனிமைப்படுத்தல் பகுதிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
எனினும் மஹபாகே பொலிஸ் பிரிவின் வெலிசறை கடற்படை முகாம் முடக்கல் பகுதியில் இருந்து நீக்கப்பட்டாலும் அங்கு கடும் கட்டுப்பாடுகளுடன் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இது இவ்வாறு இருக்க, முழு நேர ஊரடங்கு அமுலில் உள்ள கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு நிலைமையை தளர்த்துவது குறித்த தீர்மானங்கள், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் திங்களுடன் ஆரம்பிக்கும் புதிய வாரத்தில் அதற்கான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக அரச உயர் மட்ட தகவல்கள் தெரிவித்தன.
இது இவ்வாறிருக்க, தற்போதும் நாடளாவிய ரீதியில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் 34 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 2,994 பேர் தொடர்ந்தும் கண்கானிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில் இதுவரை 8,847 பேர் தமது கட்டுப்பாட்டு நிலையங்களில் இருந்து உரிய காலத்தின் பின்னர் வெளியேறியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.