மெக்சிக்கோ நகரத்தில் எகிறும் கொரோனா மரண எண்ணிக்கையால் அங்குள்ள மின்சார தகன மேடைகள், தொடர்ந்து கரும்புகையை கக்கி வருவதாக கலங்கடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலான மின் மயானங்களில் சடலங்கள் குவிந்த வண்ணம் இருப்பதாகவும், அப்புறப்படுத்தப்பட்ட சவப்பெட்டிகள் கட்டிடத்திற்கு வெளியே குவிந்து கிடப்பதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், வரைமுறையின்றி பல எண்ணிக்கையில் சடலங்கள் தகன மேடைகளில் எரியூட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி சமீப வாரங்களாக மின் மயானங்களுக்கு கொண்டு செல்லப்படும் சடலங்கள் மூன்று நாட்கள் வரை எரியூட்டுவதற்காக காக்க வைக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மெக்சிக்கோ நகர அதிகாரிகளின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் நெருக்கடியில் நாடு இப்போது அதன் ‘உச்ச தருணத்தை’ எட்டியுள்ளது.
ஆனால் கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பில் அதன் வளைவு தட்டையானது என்ற அரசாங்கத்தின் கூற்றை பலர் சந்தேகிக்கின்றனர்.
மேலும், மெக்ஸிகோவின் உண்மையான இறப்பு விகிதம் அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களை விட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஸ்கை நியூஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் மெக்சிக்கோவில் சவக்கிடங்குகள், மின் மயானங்கள், இறுதிச்சடங்கு இல்லங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவை சடலங்களை சேமிக்க இடமின்றி தடுமாறுகின்றன.
மெக்ஸிகோவில் கொரோனா வைரஸின் முதல் பாதிப்பானது பிப்ரவரி 28 அன்று பதிவு செய்யப்பட்டன.
அதன் பின்னர், அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பாட்ஜிப்புக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 42,595 ஆக உயர்ந்துள்ளது, இதில் 4,477 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டன.
இருப்பினும், செய்தி நிறுவன நிருபர்களின் விசாரணையில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரவு அனைத்தும் தவறானது என தெரியவந்துள்ளது.
மெக்ஸிகோவைப் பற்றி உலகம் அறிந்திருப்பது என்னவென்றால், நாங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்தி இருக்கிறோம்,
ஏனெனில் மெக்சிகன் மக்கள் உணர்வுப்பூர்வமான ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள் என்று நாட்டின் ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தேசத்திற்கு அளித்த தகவலில் இதை குறிப்பிட்டுள்ளார்.