கொரோனா வைரஸின் தாக்கம் குறைவது போன்று இருக்கும் நிலையில், ஐரோப்பாவின் உலக சுகாதார இயக்குனர் ஹான்ஸ் க்ளூக், வரும் குளிர்காலத்தில் ஐரோப்பிய அரசாங்கங்கள் கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
சீனாவில் முதன் முதலில் பரவிய இந்த கொரோனா வைரஸ், இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை எடுத்து வருகிறது.
குறிப்பாக ஐரோப்பாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகம் உள்ளது. இருப்பினும் தற்போது ஐரோப்பாவில் கொரோனா சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவும், இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்த குளிர்காலத்தில் ஐரோப்பா கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்று ஐரோப்பாவின் WHO தலைவர் மருத்துவர் Hans Kluge எச்சரித்துள்ளார்.
அவர், குளிர்காலத்தில் பேரழிவு தரும் கொரோனாவின் இரண்டாவது அலையை எதிர்கொள்ள அரசாங்கங்கள் தயாராக வேண்டும்.
ஐரோப்பிய நாடுகள் தற்போது குறைந்து வரும் இறப்பு எண்ணிக்கையை கொண்டாடக்கூடாது. அதற்கு பதிலாக, குளிர்காலத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
குளிர்கால காய்ச்சலுடன் போராடும் போது, கொரோனா வைரஸ் மீண்டும் உச்சம் பெறக்கூடும் என்பதால்,
அவசரகால படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் நாடுகளை வலுப்படுத்தும் படி அழைத்து விடுத்துள்ளார்.
இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, தயாரிப்பிற்கான நேரம் என்று தெரிவித்துள்ளார். இதை சிங்கப்பூரும், ஜப்பானும் ஆரம்பத்திலே புரிந்து கொண்டன.
அதுமட்டுமின்றி, ஸ்காண்டிநேவிய நாடுகள் அதைத்தான் செய்கின்றன.
கொரோனாவின் இரண்டாவது அலை பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். இலையுதிர்காலத்தில், கொரோனாவின் இரண்டாவது அலை மற்றும் பருவகால காய்ச்சல் அல்லது அம்மை நோய் போன்றவைகளில் ஏதேனும் ஒன்று இருக்கக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.