யுத்த வெற்றியின் 11 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றது.
விழாக்கள், அணிவகுப்புகள் இல்லாது இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர், முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் பாதுகாப்பு பிரதானி உள்ளிட்ட முப்படை தளபதிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 11 ஆண்டுகள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில் இலங்கை பாதுகாப்பு படைகளின் போர் வெற்றி தின நிகழ்வுகள் இன்று தேசிய இராணுவ வீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெறுகின்றது.
பிற்பகல் நான்கு மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றதுடன் அதிதிகளாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவை அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானிகள், முப்படை தளபதியினர், மற்றும் முப்படை உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரதிநிதிகள், மதத் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
வழமையாக இராணுவ அணிவகுப்புகள், போர் நினைவு நிகழ்வுகள், முப்படைகளின் வாகன பேரணிகள் என விமர்சையாக கொண்டாடப்பட்டாலும் கூட இம்முறை கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக சமூக ஒன்றுகூடல் குறித்த அச்சுறுத்தல் காணப்படும் நிலையில் ஆடம்பரமில்லாது அமைதியான முறையில் போர் வெற்றி தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது.
இதில்முப்பது ஆண்டுகால யுத்தத்தை நிறைவுக்கு கொண்டவர தமது உயிரை நீத்த முப்படைகளின் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுவும், மலர் தூவி அவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நீண்ட நேரமாக இடம்பெற்றது.
அத்துடன் யுத்தத்தில் அங்கவீனர்களாகிய பாதுகாப்பு படையினருக்கும் கௌரவம் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் பாதுகாப்பு படைகளில் சேவை புரியும் 14 ஆயிரத்து 617 பேருக்கு பதவி உயர்வுகளையும் வழங்கப்பட்டது.
அத்துடன் ஜனாதிபதி சிறப்புரையாற்றி யுத்தத்தில் உயிர்நீத்த சகல பாதுகாப்பு படியினரின் குடும்பங்களுக்கும் தனது கௌரவத்தை தெரிவித்ததுடன் தனது ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு படைகளுக்கு முன்னுரிமை வழங்க சகல மக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.