கொரோனா பேரிடரில் இருந்து மீண்டு சீன மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த நிலையில், அந்த நாட்டின் தென்மேற்கு மாகாணமான யுனானை நேற்று பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.
யுனான் மாகாணத்தில் கியாஜியா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பதிவானது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவானது.
மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
யுனான் மாகாணத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட நகரங்களை இந்த நிலநடுக்கம் கடுமையாக உலுக்கியது. வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
இதனால் அச்சமடைந்த மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.
இதில் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
கட்டிட இடிபாடுகளில் இருந்து 4 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 24 பேர் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.