கொரோனா வைரஸ் தொடர்பில் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளும் ஆதாரமற்றவை என சீனா வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கில் நடைபெறும் சீன மக்கள் காங்கிரசின் தற்போதைய அமர்வின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் யீ இதை தெரிவித்துள்ளார்.
கொரோனா தொடர்பில் அமெரிக்கா முன்வைக்கும் வழக்குகள் மற்றும் இழப்பீடு கோரும் நடவடிக்கைகள் அனைத்தும் கேலிக்குரியவை மட்டுமல்ல சட்டப்பூர்வ அடிப்படை ஆதாரமற்றவை என அமைச்சர் யீ சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா பரவலால் உலக நாடுகளைப் போன்று சீனாவும் பாதிக்கப்பட்ட ஒரு நாடு. கொரோனா நோய்க்கிருமியின் பரவலுக்கு உடனடியாகவும் பொறுப்புடனும் செயல்பட்டு விரைவாக தகவல்களைப் பகிர்ந்து கொண்டது.
மட்டுமின்றி கொரோனா தொற்றின் மரபணுக்களை உடனடியாக கண்டறிந்து அந்த தகவல்களை உலக நாடுகளுக்கு மிக விரைவில் பகிர்ந்து கொண்டது சீனா.
சர்வதேச விசாரணை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு, கொரோனா வைரஸின் தோற்றம் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களால் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியவை.
விஞ்ஞான சமூகத்தின் அத்தகைய விசாரணைக்கு சீனா எப்போதுமே தயார் நிலையில் உள்ளது. இருப்பினும், இது அரசியல்மயமாக்கப்படக்கூடாது,
ஆனால் தொழில் ரீதியாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைமையிலும் செய்யப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்றார்.
மேலும் உலக சுகாதார அமைப்புக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதியின் கடும்போக்கு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு,
கொரோனா தொடர்பில், உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை ஏற்காதவர்கள் அதற்கு அதிக விலையை தருவார்கள் என அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமல் அமைச்சர் யீ பதிலளித்துள்ளார்.