உலகின் இரண்டாவது அதிகளவிலான கொரோனா வைரஸ் மையமாக உருவெடுத்துள்ள பிரேசிலிலிருந்து வரும் பயணிகள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரேசிலில் இருந்த அமெரிக்கர்கள் அல்லாதவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை செய்யப்படுவார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த தடை வர்த்தகத்திற்கு பொருந்தாது என வெள்ளை மாளிகை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனா, ஈரான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டினரை அமெரிக்கா ஏற்கனவே தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் ஞாயிற்றுக்கிழமை 653 புதிய கொரோனா வைரஸ் இறப்புகளைப் பதிவுசெய்தது, மொத்தம் 22,666 பேர் பலியாகியுள்ளனர்.
உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 15,813 அதிகரித்து 3,63,211 ஆக உயர்ந்துள்ளது. இது அமெரிக்காவின் 1.6 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோய்கள் மற்றும் கிட்டத்தட்ட 1,00,000 இறப்புகளுக்கு அடுத்தபடியாக உள்ளது.