உரிமையாளர் கொரோனாவுக்கு பலியானது தெரியாமல், அவர் வளர்த்த நாய் மருத்துவமனை வாசலில் 3 மாதங்களாக காத்திருந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
சீனாவின் உகான் நகர மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்தது. அந்த நாய் தற்போது காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வுகான் மருத்துவமனை ஊழியர்களால் தற்போது சியாவ் பாவோ என பெயரிடப்பட்டுள்ள 7 வயது கலப்பின நாயுடன் கடந்த பெப்ரவரி மாதம் அதன் உரிமையாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் குறித்த முதியவரால் நோயின் பாதிப்பில் இருந்து விடுபட முடியாமல் 5 நாட்களுக்கு பின்னர் பரிதாபமாக பலியானார்.
தமது உரிமையாளர் திரும்ப வந்து தம்மையும் அழைத்துக் கொண்டு குடியிருப்புக்கு செல்வார் என அந்த நாய் அங்கேயே காத்திருந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் துரத்தியும் அந்த நாய் அங்கிருந்து வெளியேற மறுத்து வந்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக அதன் உரிமையாளர் விட்டுச் சென்ற பகுதியிலேயே அந்த நாய் காத்திருந்துள்ளது. இந்த 3 மாத காலமும் மருத்துவமனை ஊழியர்களே அதற்கு உணவும் அளித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஏப்ரல் 13 ஆம் திகதி ஊரடங்கு விலக்கிக் கொண்டதும் மருத்துவமனை அங்காடியும் திறக்கப்பட்டது.
அது முதல் அந்த நாய் அங்காடி உரிமையாளருடன் நெருக்கமாக இருந்துள்ளது. இருப்பினும் தனது உரிமையாளரை பார்ப்பதற்காகவே அது காத்திருப்பதாகவே அங்காடி உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கடந்த 20 ஆம் திகதி, மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி அந்த நாயை காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.