தேசிய மக்கள் சக்தியின் அணியில் இணைந்துள்ளவர்களில் சிலர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய விருப்பம் தெரிவிப்பதாகவும் எனவே கட்சியை விட்டு வெளியேறியவர்கள் விடயத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் சட்ட குழுவினருக்கு அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவும் உறுப்புரிமையில் இருந்து நீக்கி வெற்றிடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையில் வெளியேறியவர்களில் பெயர் குறிப்பிட்ட சிலர் தொடர்பில் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சி சட்டக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளதாக கட்சியின் உயர்மட்டத்தில் இருந்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அணியாக செயற்படும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்பினரகளாக செயற்பட்டு வருபவர்களில் சிலர் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ளவும் தேர்தலுக்கு முன்னர் அவர்களின் ஒரு சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையலாம் எனவும் ஏனையவர்களில் சிலர் தேர்தலின் பின்னர் கைகோர்க்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இப்போது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நடவடிக்கைகள் மற்றும் செயற்குழு கூட்டத்தில் கட்சியை மறுசீரமைக்க எடுக்கவுள்ள தீர்மானங்கள் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசமிடம் வினவியபோது அவர் கூறியதானது,
ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்தவித முரண்பாடுகளும் ஏற்படவில்லை, எனினும் ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்தும் நோக்கத்தில் ஒரு சிலர் கட்சிக்குள் இருந்துகொண்டு ஆளும் கட்சியுடன் செயற்பட ஆரம்பித்ததன் விளைவாகவே இன்று இரண்டு அணியாக செயற்பட வேண்டியுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற கட்சியின் முக்கிய கூட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியை மக்கள் மத்தியில் பலப்படுத்தும் வேலைத்திட்டமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தரப்பில் இருந்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிட சிலர் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் தேர்தலின் பின்னர் மீண்டும் எம்முடன் இணைந்து செயற்பட பலர் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
எவ்வாறு இருப்பினும் தேசிய மக்கள் சக்தியில் இருந்து யார் எம்முடன் இணைய விருப்பம் தெரிவித்தாலும் அவர்களை நிராகரிக்காது இணைத்துக்கொள்ள வேண்டும் என தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் சட்டவாக்கக்குழு மற்றும் கட்சியி யாப்பமைப்புக் குழுவிற்கு வலியுறுத்தியுள்ளார் என்றார்.