மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள அவரது மூத்த புதல்வி கோதை நாச்சியார், மத்திய கிழக்கு நாடான மஸ்கட்டில் இருந்து இலங்கை வர கடந்த இரண்டு நாட்களாக முயன்று வந்தார்.
இந்த நிலையில் அவர் அரச உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர நடவடிக்கைகளால் இறுதியாக இந்தியா ஊடாக அவர் இன்று அதிகாலை கொழும்பு வந்தடைந்தார்.
எனினும் கொழும்பு வந்தாலும் அவர் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா சுகாதார கட்டுப்பாடு வழிமுறைகளின் கீழ் அவர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த சோகமான நிலைமையை கருத்திற்கொண்டு அவரை தூர இருந்து தந்தையாரின் பூதவுடலை பார்க்க அனுமதிக்கலாமா என சுகாதார அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தந்தையின் பாசத்திற்குரிய மூத்த புதல்வி தந்தையாரின் பூதவுடலை நேரடியாக காண கொரோனா நிலைமையால் ஏற்பட்டுள்ள தடை குறித்து குடும்ப உறுப்பினர்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அறியமுடிந்தது.
இதேவேளை கொரோனா அச்சுறுத்தலின் மத்தியில் வெளிநாட்டில் இருந்து தந்தையை இறுதியாக காண்பதற்கு ஓடோடி வந்த மகளுக்கு இப்படி ஒரு துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளமை பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.