கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஊரடங்கை தவிர மாற்று வழி உண்டா என்பது குறித்து நோபல் பரிசு பெற்ற அவுஸ்திரேலிய விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலகமெங்கும் 59 லட்சத்துக்கும் அதிகமானோரை பாதித்து உள்ளது.
இந்த வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு, உலக நாடுகளில் எல்லாம் பெரும் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டன.
இதன் காரணமாக இந்தியா, அமெரிக்கா என பல நாடுகளும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திக்கொண்டு, பொருளாதார நடவடிக்கைகளை திறந்து விடத்தொடங்கி உள்ளன.
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் வசிக்கின்ற நோய் எதிர்ப்பு நிபுணர் பீட்டர் சார்லஸ் டோஹர்த்தி இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். இவர், 1996-ம் ஆண்டு, மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கூறியதாவது:-
இனி வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே போகும்.
அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு தேவையான தடுப்பூசி கிடைப்பதற்கு 9 முதல் 12 மாதங்கள் வரை ஆகும். அதுவும் இப்போது நடந்து கொண்டிருக்கிற சோதனைகள் எல்லாம் சரியாக நடந்து வர வேண்டும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாத தொடக்கத்தில் பாதுகாப்பான தடுப்பூசி கிடைக்கக்கூடும். தடுப்பூசியின் வகை என்ன, அது எவ்வளவு விரைவாக தயாரிக்க முடியும், எப்படியான குப்பிகளில் வைக்க முடியும் என்பதையெல்லாம் பார்க்க வேண்டும்.
கொரோனா வைரசை பொறுத்தமட்டில் அது இன்புளுவன்சாவைப் போல வேகமாக மாறாது. இதுவரை அறியப்பட்டதில் இருந்து பார்க்கிறபோது, அதே தடுப்பூசி எல்லா இடங்களிலும் வேலை செய்ய வேண்டும்.
கொரோனா வைரஸ் கடினமான விஞ்ஞான விஷயமாக இருப்பதால், எல்லா இடங்களிலும் முழுமையான பொது முடக்கம் இருக்க வேண்டும். ஆனால் இது பொருளாதாரம் மற்றம் சமூக அளவிலும் சாத்தியமற்றது.
அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை உயரும். பரவலை கட்டுப்படுத்துவது என்பது மக்கள் பொறுப்புடன் செயல்படுவதையும், விரைவான பதிலளிப்பு திறனையும் பொறுத்தது.
ஊரடங்குக்கு மாற்று வழி ஏதேனும் உண்டா என்று கேட்டால், அதற்கு எல்லைகளை மூடுவதைத் தவிர வேறு வழி இல்லை.
உதாரணமாக, தென்கொரியா மிகவும் ஒழுக்கமான மக்களைக்கொண்ட ஒரு நாடு. செல்வந்த நாடு. அங்கு மிக தீவிரமான பரிசோதனை நடைபெற்றது. பாதித்தவர்களின் தொடர்பு தடங்களை கண்டறிந்தனர்.
ஆனால் தடுப்பூசிகள் வரும் வரையில், எல்லைகளை மூடுவது என்பது சாத்தியமானதாக தெரியவில்லை.
கொரோனா வைரஸ் ஒரு புதிய வைரஸ். அது இயற்கையில் இருந்து நேராக வெளிவந்த புதிய வைரஸ். இது உலகம் முழுவதும் வேகமாக நகர்ந்துள்ளது. ஏனென்றால் மக்கள் சர்வதேச விமானங்களில் பறக்கிறார்கள். சுற்றலா கப்பல்களில் பயணிக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை தருவது சரியானது அல்ல. அதை நிறுத்த வேண்டும். கடுமையான நோய்க்கு இந்த மாத்திரைகளை பயன்படுத்துவது நிச்சயமாக முரண்பாடாக இருக்கிறது. ஆனால் மருத்துவர்கள் மேற்பார்வையில் எடுத்துக்கொண்டால், அதுவும் ஆரம்பத்தில் எடுத்துக்கொண்டால் அல்லது நோய்த் தடுப்பு மருந்தாக இருந்தால், அது சில பயனுள்ள விளைவுகளை ஏற்படுத்துமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.
நாம் இன்னும் சரியானபடிக்கு சோதித்து அறியவில்லை.
கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களுக்கு பிளாஸ்மா தெரபி பலன் அளிக்குமா என்று கேட்டால், இது தொடர்பான சோதனைகள் இல்லை. குறிப்பாக பிளாஸ்மா, ஆண்டிபாடி அளவுகளுக்கு சோதிக்கப்பட்டு, நல்ல செயல்பாட்டுக்கான சான்றுகள் இருந்தால், அது உதவியாக இருக்கும்.
எனக்கு நோய் இருந்தால், பிளாஸ்மா சிகிச்சை அளித்தால் அதை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனால் நான் ஹைட்ராக்சிகுளோரோகுயின் எடுத்துக்கொள்ள மாட்டேன்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதே சிறந்த நம்பிக்கை அளிக்கும் என்று அவர் கூறினார்.