பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் 11 பேர் அடங்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவ நடவடிக்கைக்காக ஸ்தாபிக்கப்பட்ட செயலணி குறித்து இந்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஜனாதிபதி செயலணியில், தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் மற்றும் நில அளவை ஆணையாளர் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.
கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் இடங்களை அடையாளங்கண்டு அவற்றை பாதுகாத்தல் உள்ளிட்ட பல விடயங்களை ஆராய்ந்து அது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிப்பது ஜனாதிபதி செயலணியின் நோக்கமாகும்.
இதேவேளை, பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான சட்டபூர்வமான சமூகம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான புதிய செயலணியொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்படுத்தியுள்ளார்.
அதற்கமைய அதற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகியுள்ளது. 13 பேரடங்கிய ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலணிக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமை தாங்கவுள்ளார்.
முப்படைத் தளபதிகள் பொலிஸ் தலைமையதிகாரி மற்றும் புலனாய்வு அதிகாரிகளை உள்ளடக்கிய சட்டத்தை மீறி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சமூக குழுக்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை களைவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுப்பதற்காக இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பும் புதிய செயலணியிடம் வழங்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் விமானநிலையங்கள் ஊடாக போதைப்பொருட்கள் இலங்கைக்கு வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பும் இந்த செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.