ரஷியாவின் சிபேரியன் நகரத்தின் வடக்குப் பகுதி நோரில்ஸ்க் என்ற இடத்தில் மின் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு டீசலை சேமித்து வைக்கும் மிகப்பெரிய டேங்க் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த டேங்க் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதனால் டீசல் பெருக்கெடுத்து ஓடி அருகில் உள்ள அம்பர்னாயா ஆற்றில் கலந்தது. இதனால் பல மைல் தூரத்திற்கு அந்த ஆறு சிவப்பு கலரில் தோற்றமளிக்கிறது.
மெதுமெதுவாக இந்த விஷயம் அதிபர் புதின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. உடனே அந்த மாநிலத்தில் அவசர நிலையை பிரகடனம் படுத்தியுள்ளார். மேலும், தாமதமாக தெரிவித்ததால் அதிகாரிகளை திட்டியுள்ளார். அத்துடன் துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சுமார் 20 ஆயிரம் டன் டீசல் வெளியேறியதாக கூறப்படுகிறது. ஆறு மீண்டும் பழைய நிலையை அடைய சுமார் 10 ஆண்டுகள் ஆகும். ஆற்றை சுத்தப்படுத்த 1.16 பில்லியன் பவுண்டு செலவாகும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின், அதிகாரிகளின் கவனக்குறைவால் தான் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. எண்ணெய் கசிவை சீக்கிரம் கண்டுபிடித்திருந்தால் ஆறு முழுவதும் மாசடையும் நிகழ்வு நடந்திருக்காது.
மேலும் எண்ணெய் கசிவை தாமதமாக கண்டுபிடித்ததற்கும் அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என கண்டித்துள்ளார்.