தனியார் துறையினரது அலுவலக சேவை நேரத்தை காலை 10 மணிக்கு ஆரம்பிக்க ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
சுகாதார பாதுகாப்பு முறைகளை பிள்பற்றாமல் போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் பேருந்து உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலுத்துறை மற்றும் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு நிபந்தனைகளினால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு பல்வேறு வழிமுறை ஊடாக நிவாரணம் வழங்கப்படும். எக்காரணிகளுக்காகவும் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கும், தனியார் மற்றும் அரச போக்குவரத்து சேவை அதிகாரிகள், தொழிற்சங்கத்தினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம் பெற்றது.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பான ஊடக சந்திப்பு இன்று தினம் போக்குவரத்து அமைச்சில் இடம் பெற்றது. இதன் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முடக்கப்பட்டிருந்த மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவை ஆகியவை தற்போது வழமை நிலைக்கு திரும்பியுள்ளன.
சுகாதார தரப்பினர் அறிவுறுத்திய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு அமையவே போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டள்ளன.
போக்குவரத்து சேவை ஆரம்பிக்கும் போது குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் 95 சதவீதம் பின்பற்றப்பட்டுள்ளன. பேருந்து, புகையிரதங்களிவ் பயணிகள் ஆசனங்களில் அமர்ந்தவாறு பயணம் செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு சில பேருந்து உரிமையாளர்கள் இந்த நிபந்தனைகளை மீறியுள்ளார்கள் . இவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து சேவை வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் வீதிகளில் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது.
அலுவலகங்களின் சேவை நேரம் ஆரம்பிப்பதை இரண்டாக வேறுப்படுத்துமர்று கடந்த வாரம் போக்குவரத்து அமைச்சு யோசனையொன்றை முன்வைத்தது.
இதற்கமைய தனியார் துறையினரது சேவை காலை 10 மணிக்கு ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.
போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் போது பின்பற்ற வேண்டிய கட்டாய பாதுகாப்பு நிபந்தனைகளினால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாக தனியார் பேருந்து சங்கத்தினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டார்கள்.
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம், இலகு வட்டியிலான கடனுதவி, மற்றும் காப்புறுதி ஆகியவற்றை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
எக்காரணிகளுக்காகவும் தற்போது நடைமுறையில் உள்ள பேருந்து கட்டணத்தை அதிகரிக்க இடமளிக்க முடியாது. எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தற்போது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுகின்ற பஸ்கள் பாதுகாப்பற்றதாகவும், பயண போக்குவரத்துக்கு பொருத்தமற்றதாகவும் உள்ளது.
ஆகவே இனிவரும் காலங்களில் அதி சொகுசு பேருந்துகள் மாத்திரமே அரச மற்றும் தனியார் துறையின் ஊடாக இறக்குமதி செய்யப்படும்.
தனியர்ர் துறைக்கு இதற்கும் வட்டியில்லா கடன்வசதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டது.
கொவிட் – 19 வைரஸ் பரவல் நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை. ஆகவே பொது மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
போக்குவரத்து சேவையினை முறையாக கட்டுப்பாட்டுக்குள் பாதுகாப்பான முறையில் வைத்துக் கொண்டால் அனைத்து சவால்களையும் சுலபமாக வெற்றிக் கொள்ள முடியும். ஆகவே பொது மக்கள் தற்போது பொறுப்புடன் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றார்.