பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் எங்களுக்கு எந்தப்போட்டியுமில்லை. பொதுஜன பெரமுனவுடனே போட்டியிருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தலில் கைவிரல் எண்ணிக்கையளவேனும் ஆசனங்கள் கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி பதுளையில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியுடன் எமக்கு எந்தபோட்டியும் இல்லை. அவர்களுக்கு 5 வீத வாக்குகளும் கிடைக்கப்போவதில்லை. ஐக்கிய தேசிய கட்சியில் 15 பேரே இருக்கின்றனர்.
அவர்களுடன் எமக்கு போட்டியிருக்காது. அவர்கள் அரசாங்கத்துடன் டீல் வைத்துக்கொண்டே செயற்படுகின்றனர். அதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு கைவிரல் எண்ணிக்கையளவேனும் ஆசனங்கள் கிடைக்காது.
அதேபோல் எமது அணியில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த மங்கள சமரவீர போட்டியிடுவதில் இருந்து விலகிக்கொண்டுள்ளார். என்றாலும் அவர் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்திருப்பதை வரவேற்கின்றோம்.
அத்துடன் எமது ஐக்கிய மக்கள் சக்திக்கு சிறந்த தலைவர் ஒருவர் கிடைக்கப்பெற்றிருக்கின்றது. சஜித் பிரேமதாசவின் தலைமையில் எமக்கு சிறந்ததொரு அரசியல் பயணத்தை கொண்டுசெல்லலாம்.
ரணில் விக்ரமசிங்க எப்போதும் மஹிந்த ராஜபக்ஷவுடன் டீல் வைத்துக்கொண்டு செயற்படுகின்றவர். எமது அணியில் டீல் காரர்கள் யாரும் இல்லை. அதனால்தான் ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மையானவர்கள் எங்களுடனே இருக்கின்றனர்.
மேலும் இந்த அரசாங்கம் தற்போது வீழ்ச்சியடைந்திருக்கின்றது. ஆரம்பத்தில் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.
ஆனால் தற்போது அரசாங்கத்தை அமைக்க தேவையான பெரும்பான்மையை பெறுவதாக தெரிவிக்கின்றனர். இதன்மூலம் இவர்களின் வங்குராேத்து நிலைமை தெளிவாகின்றது.
அத்துடன் நாட்டின் சட்டம் படுபாதாளத்துக்கு சென்றுள்ளது. ஏப்ரல் தாக்குதலுக்கு பொறுப்பு சொல்லவேண்டியவர் இன்று அந்த கட்சியின் தவிசாளராக இருக்கின்றார்.
அப்படி இருக்கும்போது எவ்வாறு குற்றவாளிகளை இவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்துவார்கள். அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் 7 மாதங்களிலே மக்களுக்கு இந்த அரசாங்கம் மீது விரக்தி ஏற்பட்டிருக்கின்றது.
ஏகாதிபத்திய ஆட்சியே நாட்டில் இடம்பெற்றுக்காெண்டிருக்கின்றது. இவை அனைத்துக்கும் எதிர்வரும் தேர்தலில் மக்கள் சிறந்த பாடத்தை புகட்டுவார்கள் என்றார்.