கேள்வி மனுக்கோரல் எதுவுமின்றி மின்உற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை சட்டவிரோத செயற்பாடாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போது நாட்டுக்கு மின் உற்பத்தி நிலையத்தையும் விட கெரவலபிட்டியில் திரவ எரிவாயு மின்நிலையத்தை அமைப்பதே மிக முக்கியமாகும் எனவும் , மக்கள் இந்த விடயம் தொடர்பில் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மின்சக்தி தொடர்பில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் சட்டதிட்டத்திற்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. அனல் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது சட்டத்திற்கு புறம்பான செயற்பாடாகும்.
நாட்டில் மின் உற்பத்தி நிலையம் ஒன்று அமைக்கப்படுமாயின் அது அரச கொள்கைக்கு அமைய செயற்பட வேண்டும் என்பதுடன் , இது தொடர்பாக போட்டித்தன்மையிலான கேள்வி மனுக்கோரல் இடம்பெற்றிருக்க வேண்டும்.
இவ்வாறு எதுவும் இல்லாமல் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க லங்கா விஜய நிறுவனத்தின் சி.எம்.பி.சி.க்கு அனுமதி வழங்கியுள்ளது.
புத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்தில் 900 மேகா வோல்ட் மின் உற்பத்திச் செய்யப்பட்டாலும் 700 மேகா வோல்ட் மாத்திரமே விநியோகிக்கப்படுகின்றது.
இதன்போது வீண் விரயமாகும் 200 மெகா வோல்ட் மின்சாரத்தை பயன்படுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை. இதேவேளை இந்த அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்ட போது , கடந்த 2006 – 2007 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற முறைகேடுகளினாலேயே இந்த சிக்கல் தோன்றியிருந்தது.
நிலக்கரி விநியோகத்தின் போதும் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. கடல் கொந்தளிப்பு அதிகரித்தால் இந்த நிலக்கரி ஆங்காங்கே சிதறியமையினால் 2016 ஆம் ஆண்டு சுற்றுபுறச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் போது சுற்றுப்புறச் சூழல் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்நிலையில் இங்கு அவ்வாறான எந்த கவனமும் செலுத்தப்படவில்லை.
இந்த சிக்கல்கள் காரணமாகவே திருகோணமலையில் அனல் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும், அதுவும் சாத்தியப்படவில்லை.
இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த முடிவு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். கெரவலபிட்டியில் அனல் மின் நிலையத்தை அமைப்பதைவிட திரவ எரிவாயு மின்நிலையத்தை அமைப்பதே மிக முக்கியமாகும்.
இந்த விடயம் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நாங்களும் அவதானத்துடனே இருந்து வருகின்றோம்.
அரசாங்கத்தின் ஒப்பந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்
ஜப்பான் நிறுவனமொன்றின் உதவியுடன் புகையிரத பாதைகள் அமைப்பதற்கான திட்டமொன்றை நல்லாட்சி அரசாங்கம் எடுத்திருந்தது.
இதற்கு எதிரான வகையில் தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருகின்றமையினால் புகையிரத பாதைகள் திட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்ற அந்த நிறுவனம் வினவியுள்ளது.
இலங்கையை பொறுத்தமட்டில் வாகன நெரிசல் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையிலே இந்த புகையிரத பாதைகள் அமைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் அதற்கும் தற்போதைய அரசாங்கம் இடையூறு விளைவித்து வருகின்றது. இதற்கு மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.



















