தேர்தலில் வாக்களிக்கும் போது முதலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு புள்ளடியிடுங்கள், பின்னர் விருப்பு வாக்கினை அளியுங்கள் நாட்டுக்கும், ஊருக்கும் சிறந்த சேவையாற்றுபவரை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யுங்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
குருநாகல் – ஹெட்டிபொல பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தை அமைப்பது குறித்து மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இரு வேறுப்பட்ட கட்சிகள் ஒன்றினைந்து ஆட்சியமைத்தால் முரண்பாடுகள் மாத்திரமே மிகுதியாகும் என்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் மக்களே பாதிக்கப்பட்டார்கள்.
அபிவிருத்தி பணிகள் நாட்டில் மந்தகரமாக முன்னெடுக்கப்படுகின்றன. எமது ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்ட அபிவிருத்திகள் அரசியல் காரணிகளினால் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பிரதேசங்களுக்கும் முறையான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் பலமான அரசாங்கம் தோற்றுவிக்க வேண்டும்
ஊருக்கும், நாட்டுக்கும் சேவையாற்றுபவர்களை பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யுங்கள். பாராளுமன்றத்தில் தன்னை தெரிவு செய்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விவாதிப்பவரால் மாத்திரமே மக்களின் ஆணையை தொடர்ந்து பெற முடியும். இடம் பெறவுள்ள பொதுத்தேர்தல் தீர்மானமிக்கதாக உள்ளது.
வாக்களிப்பின் போது முதலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு புள்ளடியிடுங்கள் பின்னர் விருப்பு இலக்கத்திற்கு, விருப்பு வாக்கினை அளியுங்கள். தேர்தல் தொடர்பில் வேட்பாளர்கள் ஆசன மட்டத்தில் வாக்களாளர்களுக்கு தேர்தல் சட்ட விதிமுறைகளை பின்பற்றி தெளிவுப்படுத்தல் வேண்டும் என்றார்.



















