கத்தோலிக்க திருச் சபையின் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சம்பந்தமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பேராயரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
அதேவேளை கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மீது குற்றம் சுமத்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டிருந்த கருத்து மற்றும் அதன் ஊடாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள வாத விவாதங்கள் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர்களின் சந்திப்பொன்று நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பு அந்த கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நடைபெற்றது.
கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன, ஹரின் பெர்னாண்டோ, முழு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என கூறியிருந்தார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு கிடைக்க வேண்டிய கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வாக்குகளை பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையே தடுத்ததாக ஹரின் பெர்னாண்டோ, பொலன்நறுவை பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தேர்தல் மேடைகளில் கருத்துக்களை வெளியிடும் போது மிகவும் கவனமாக இருக்குமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக மதத் தலைவர்கள் உட்பட சமூகத்திற்கு அழுத்தங்களை கொடுக்கக் கூடிய நபர்கள் குறித்து கருத்து வெளியிடும் போது கவனமாக இருக்குமாறும், இவர்கள் தொடர்பாக கவனமின்றி வெளியிடும் கருத்துக்களால், தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் சில தரப்பினர் வெளியிட்ட பொறுப்பற்ற கருத்துக்கள் தனது தோல்விக்கு காரணமாக அமைந்தது எனவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.