நாட்டின் அனைத்து வளங்களையும் விற்பனை செய்து விட்டு கைகளை கழுவுவதே கடந்த அரசாங்கத்தின் கொள்கையாக இருந்ததாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருணாகல் மாவ, வெலியாய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் பேசிய அவர்,
நாட்டு மக்கள், நாளை பிறக்க போகும் குழந்தைகளுக்காக மாத்திரமல்ல எதிர்காலத்தில் பிறக்க போகும் குழந்தைகளுக்கும் சொந்தமான தேசிய வளங்களை பாதுகாப்பது தனது கொள்கை.
நாட்டின் அனைத்து வளங்களையும் விற்பனை செய்து விட்டு கைகளை கழுவுவதே கடந்த அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி நடத்தி அனைத்து சந்தர்ப்பங்களில் போன்று கடந்த ஆட்சி காலத்திலும் நாட்டின் வளங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்தது. எனினும் எனது அரசாங்கம் நாட்டில் வளங்களை உருவாக்க நடவடிக்கை எடுத்தது.
எனது அரசாங்கத்தில் துறைமுகம், விமான நிலையம், அதிவேக நெடுஞ்சாலைகள், நீர் விநியோகத் திட்டங்கள் என அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நாட்டின் வளங்களை விற்பனை செய்வது கொள்கையாக இருந்தது.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் விற்பனை செய்த வளங்களில் துறைமுகம் பிரதானமானது. மேலும் பல வளங்களை விற்பனை செய்வதற்காக வேறு நாடுகளுடன் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன.
ஒரு அரசாங்கம் இரண்டு நாடுகளுக்கு இடையில் உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொண்டால், அந்த உடன்படிக்கையை இரத்துச் செய்து விட்டு முன்நோக்கி செல்ல முடியாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் சர்வதேச ரீதியான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு இலங்கை தனிமைப்படுத்தப்படும் நிலைமைக்கு தள்ளப்படும்.
நாட்டின் வளங்கள் எதிர்கால சந்ததியினருக்கு உரித்தாக வேண்டும் என்பது எனது கொள்கை. இந்த கொள்கையை பாதுகாக்க அனைத்து அர்ப்பணிப்புகளையும் செய்வேன் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.