உயிர்த்த ஞாயிறு தினத்தில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்சாஃப் அகமட், 2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் தேசிய தௌஹீத் ஜமாத் (என்.டி.ஜே) அமைப்புக்காக கிட்டத்தட்ட 45 மில்லியன் ரூபாவை செலவிட்டது தெரிய வந்துள்ளது.
நாட்டுக்குள் அடிப்படைவாத கருத்துக்களை பரப்பவும், அந்த செயற்பாட்டுக்காகவும் இந்தப் பணம் செலவிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த சிஐடி பிரதான பொலிஸ் பரிசோதகர் சி.ஐ. ரவீந்திர விமலசிறி நேற்று சாட்சியமளித்தபோது இதனை தெரிவித்தார்.
இன்சாஃப் அகமட் பல நிறுவனங்களின் உரிமையாளர். அவர் பணத்தை எந்த தேவைக்காக, எந்த நிறுவனத்தில் செலவிடுகிறார் என்பதை முறையான கணக்கு பதிவில் பராமரித்து வந்தார். ஆனால், 2019 முதல் நான்கு மாதங்களில் அவர் 45 மில்லியன் ரூபாவை செலவிட்ட நோக்கம் குறித்த எந்த பதிவும் இல்லை. அந்த பணம் நாட்டிற்குள் தீவிரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது என்றார்.
இதன்போது, தாக்குதலின் முதல்நாள் குடும்பத்தினருக்காக இன்சாஃப் அகமட் பதிவுசெய்த 4 குரல் பதிவுகள் ஒலிக்கவிடப்பட்டது.
தாக்குதலின் பின்னர் தனது குடும்பத்தினர் மலேசியா தப்பிச் செல்வதற்காக விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்ட விபரத்தை ஒரு குரல்பதிவு வெளிப்படுத்தியது.
குழந்தைகளுடன் வாழ மலேசியா பாதுகாப்பான நாடு என உணர்ந்தால் அங்கு செல்லும்படி தனது மனைவிக்கு அவர் அறிவுறுத்தும் குரல் பதிவு உள்ளது.
தான் உயிரிழந்த பின்னர் தனது சொத்துக்களை எப்படி பராமரிப்பது என்பது பற்றி மனைவிக்கு ஒரு குரல் பதிவு செய்துள்ளார். அவரது தொழிற்சாலைகளின் ஊழியர்களிற்கும் குரல் பதிவில் தகவல் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்த என் முடிவெடுத்தேன் என்பதை அந்த குரல் பதிவுகளில் விளக்கியுள்ளார். அத்துடன், தாக்குதலிற்காக தனது குடும்பம் மற்றும் நாட்டிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
நான் இந்த பாதைக்காக வருந்தினால், அது முழு முஸ்லிம் சமூகத்திற்கும் தீவிரமான விசயமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மாவனெல்ல புத்தர் சிலை சேதமாக்கியவர்களின் விபரங்களை வெளிப்படுத்தியதன் மூலம், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை பாசாங்குத்தனத்தை காட்டியதாக விமர்சித்துள்ளார். அந்த அமைப்பு உண்மையான முஸ்லிம்கள் மீது எடுக்கும் நடவடிக்கைகள், முஸ்லிம்களின்ஒரு பகுதியினரை ஆபத்தில் தள்ளியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
விசாரணை அதிகாரி மேலும் சாட்சியமளிக்கையில்,
சாம்பியாவில் வர்த்தக மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்து அவர், ஏப்ரல் 17ஆம் திகதி புறப்பட்டார். குடும்பத்தினர் அவரை விமான நிலையத்தில் இறக்கி விட்டு, மன்னாருக்கு சென்றனர். ஆனால், சிறிது நேரத்தின் பின் இன்சாஃப் அகமட் டக்ஸியொன்றை பிடித்துக் கொண்டு தெமட்டஹொட மகாவில கார்டனிலுள்ள தனது வீட்டிற்கு சென்றார்.
தான் சாம்பியாவில் இருப்பதாக பல வட்ஸ்அப் தகவல்களை மனைவிக்கு அனுப்பியபடியிருந்தார்.
தெமட்டஹொட, மகாவில கார்டனில் மனித வெடிகுண்டாக பிள்ளைகளுடன் தற்கொலை செய்த பாத்திமா ஜிப்ரிதான், இன்சாஃப் அகமட் மற்றும் சகோதரர்கள் மனித வெடிகுண்டாக மாற முக்கிய காரணமென தெரிவித்தார்.