பெருந்தொகையான இராணுவத்தினரை கொன்றதாக கூறி, தன்னை ஹீரோவாக காண்பிக்க கருணா முயற்சிக்கிறார். ஆனால் அவர் யுத்தகளத்தில் அவ்வளவு இராணுவத்தினரை கொல்லவில்லை. சரணடைந்த இராணுவத்தினரையே கொன்றார் என தெரிவித்துள்ளார் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா.
ஒரே இரவில் ஆனையிறவில் 2000, 3000 இராணுவத்தினரை கொன்றோம், கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரை கொன்றேன் என அண்மையில் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தது குறித்து, பொன்சேகா கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
“முல்லைத்தீவில் சரணடைந்த 1,200 இராணுவ வீரர்களையும், கிழக்கில் சரணடைந்த 600 பொலிசாரையும் கருணா கொன்றது உண்மைதான்.
எனினும், ஆனையிறவு மற்றும் கிளிநொச்சியில் யுத்த களத்தில் அவர் சொன்ன எண்ணிக்கையில் அவர் இராணுவத்தினரை கொல்லவில்லை.
இராணுவத்தினரை கொன்றதாக கூறி, தமிழ் மக்களிடம் அவர் ஹீரோவாக முயற்சிக்கிறார். ஆனால் சரணடைந்தவர்களையே அவர் கொன்றார்.
கருணா அம்மான் இலங்கை பொதுஜன பெரமுனாவில் (எஸ்.எல்.பி.பி) பொறுப்பு வகிக்கிறார். அவரை அரசாங்கமே பாதுகாத்து வருகிறது. இந்த கூற்றிற்காக அவரை சிறையிலடைத்திருக்க முடியும். இந்த கருத்திற்காக அவரை நீதிமன்றத்திலும் முற்படுத்தியிருக்கலாம்“ என்றார்.