அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கிரீன் கார்டு நிறுத்தியது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக கொரோனா வைரஸ் உள்ளது. இந்த நோய் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில், அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
அதுமட்டுமின்றி, கொரோனா’ வைரஸ் பரவலால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பால், அமெரிக்காவில் பலருடைய வேலைவாய்ப்பு பறிபோனது.
10 லட்சம் பேர் அதையடுத்து, அமெரிக்காவில் வேலை பார்க்கும் வெளிநாட்டவருக்கு, கிரீன் கார்டு எனப்படும் குடியுரிமை வழங்குவதை, 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக, ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஏப்ரலில் அறிவித்தார்.
இது, இந்தாண்டு இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கான காரணம் குறித்த கேள்விக்கு, ‘தற்போது அமெரிக்க மக்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பை அளிக்க வேண்டும். தற்போதுள்ள வேலை வாய்ப்புகள் அமெரிக்கர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்காக தான் இந்த முடிவு என, டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க குடியுரிமை சட்டத்தின்கீழ், ஆண்டுக்கு, 1.40 லட்சம் வெளிநாட்டவருக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. இது அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர், அவருடன் இருக்கும் அவருடைய மனைவி அல்லது கணவர், குழந்தைகளுக்குப் பொருந்தும்.
தற்போதைய நிலையில், கிரீன் கார்டு கேட்டு, 10 லட்சம் பேர் காத்திருக்கின்றனர்.மேலும் ஒரு நாட்டுக்கு அதிகபட்சம், 7 சதவீதம் மட்டுமே கிரீன் கார்டு வழங்கப்படும்.
அரசியல் நாடகம் இந்தக் கட்டுப்பாடுகளால் அமெரிக்காவில் அதிக அளவில் பணிபுரியும் இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்கள், கிரீன் கார்டு கிடைப்பதற்கு பல ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது. தற்போது அது நிறுத்தி வைக்கப்படுவதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும்.
இதற்கிடையே, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் குடியுரிமை அல்லாத, எச்1பி விசா உள்ளிட்ட வேலைக்கான விசாக்கள் வழங்குவது, இந்தாண்டு இறுதிவரை நிறுத்தி வைத்து, டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு, அமெரிக்க எம்.பி.,க்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளனர்.
இந்தியா போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த உயர் திறனுள்ளவர்கள் அமெரிக்கா வருவது தடுக்கப்பட்டு விடும். ‘வெளிநாட்டு ஊழியர்களை நம்பியுள்ள அமெரிக்க நிறுவனங்கள், இந்த உத்தரவால் கடுமையாக பாதிக்கப்படும். இந்த உத்தரவு நாட்டின் நலனுக்கு எதிரானது. ‘இதை, ஜனாதிபதி தேர்தலுக்கான அரசியல் நாடகமாகவே பார்க்கிறேன், என, எம்.பி., ஜூடி சூ கூறியுள்ளார்



















