இந்தியா, சீனா இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கிழக்கு லடாக்கின் புதிய பகுதியில், சீனா இராணுவத்தை குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா-சீனா இடையே லடாக் பகுதியில், கடந்த சில வாரங்களாகவே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த ஜூன் 6-ஆம் திகதி மோல்டோ பகுதியில் இந்தியா-சீனா இராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அங்கு இரு தரப்பினரும் படை குறைப்பு குறித்து ஆலோசித்தனர்.
இதையடுத்து, ஜூன் 15-ஆம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா மற்றும் சீனா என இரு தரப்பைச் சேர்ந்த துருப்புக்களுக்கு இடையே வன்முறை மோதல் ஏற்பட்டது. இதன் விளைவாக 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், சீனாவில் 40 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், தங்கள் நாட்டை சேர்ந்த 40 இராணுவ வீரர்கள் இறக்கவில்லை என்று கூறி வருகிறது.
இந்நிலையில், கிழக்கு லடாக்கின் சில புதிய பகுதிகளில், சீனாவால் இராணுவ குவிப்பு செய்யப்படுகிறது. சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் (பி.எல்.ஏ) தவுலத் பேக் ஓல்டி (டி.பி.ஓ) மற்றும் டெப்சாங் செக்டாரில் ராணுவ குவிப்பை அதிகரித்துள்ளது.
ஜூன் மாதத்தில் புதிதாக, சீனத் தளத்திற்கு அருகில் முகாம்களும் வாகனங்களும் காணப்படுவதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் உறுதி செய்கின்றன.
இந்த தளங்கள் 2016-ஆம் ஆண்டுக்கு முன்னர் சீனாவால் கட்டப்பட்டவை, ஆனால் புதிய முகாம்கள் மற்றும் வாகனங்களுக்கான வழித் தடங்கள் இங்கு புதிதாக உருவாக்கப்படுகின்றன என்று செயற்கைக்கோள் படங்களில் அம்பலமாகியுள்ளது.
தரை கண்காணிப்பு மூலமும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. டெப்சாங்கில் சீனா இராணுவ குவிப்பில் ஈடுபட முடியும் என்பதை மே மாத இறுதியில் இந்தியா உணர்ந்தது. பின்னர் இப்பகுதியில் தனது இருப்பை இந்தியா உறுதிப்படுத்தியது. 2013-ல் சீன இராணுவம் ஊடுருவிய பகுதி டெப்சாங் என்பது நினவுகூரத்தக்கது.