உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதாவது நான்கில் ஒருபங்கு பாதிப்பு அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹான் நகரில் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
அடுத்த 6 மாதத்துக்குள் உலகளவில் ஒரு கோடி பேர் இந்த கொடூர வைஸின் பாதிப்புக்கு இலக்காகியுள்ளனர்.
உலகளவில் கொரோனாவில் பாதி்க்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியே 82 ஆயிரத்து 618 ஆக உள்ளது.
இதில் குணமடைந்தோர் எண்ணிக்கை 54 லட்சத்து 58 ஆயிரத்து 523 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து ஆயிரத்து 109 ஆக அதிகரித்துள்ளது.
கோடை காலத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் குறையும் என்று கூறப்பட்ட நிலையில் ஜூன் மாதத்தில்தான் இதுவரை இல்லாத அளவாக நாள்தோறும் 1.25 லட்சம் பேர் உலகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 1.90 லட்சம் பேர் உலகளவில் கொரோனாவால் மரணமடைந்தனர். இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் மார்ச் மாதம் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் உச்சத்தில் இருந்தது.
அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் உலகில் மொத்தம் 38 நாடுகள் கொரோனா பாதிப்பிலிலுருந்து மீண்டுவிட்டன, சில நாடுகள் மீளும் தருவாயில் இருக்கின்றன.
இதில் சில சிறிய தீவு நாடுகளான துவாலு, வனுவாட்டு, சாலமன்தீவுகள், நியூஸிலாந்து போன்றவை அடங்கும். இலங்கை, பூடான் நாடுகளும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளன.
ஆனால், தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், பெரு, சிலி ஆகிய நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.
இந்த 3 நாடுகளிலும் சேர்த்து 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பிரேசிலில் மட்டும் 12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.




















