சமைக்கும் போது பாத்திரங்களில் இருந்து சமைத்த உணவுப் பொருளின் மணம் வீசுவது சாதாரணம் தான். ஆனால் பூண்டு, முட்டை போன்ற பொருட்களைப் பயன்படுத்தினால், அந்த பொருட்களின் நாற்றமானது அவ்வளவு எளிதில் பாத்திரத்தில் இருந்து போகாது.
அதேப் போல் மீன் சமைத்த பாத்திரங்களில் இருந்து வெளிவரும் மீன் நாற்றமும் அவ்வளவு எளிதில் போகாமல் இருக்கும்.
அதன் காரணத்தினாலேயே பலர் வீட்டில் மீன் வாங்கி சமைப்பதை நிறுத்திவிடுகின்றனர். ஆனால் அப்படி மீன் நாற்றத்தைப் போக்கும் சில வழிகளை தெரிந்து கொண்டால், எந்த ஒரு கவலையும் இல்லாமல் வீட்டிலேயே மீனை வாங்கி சமைக்கலாம்.
டிஷ் வாஷ் நீர்மம்
மீன் சமைத்த பாத்திரத்தில் இருந்து வெளிவரும் மீன் நாற்றத்தைப் போக்க, டிஷ் வாஷ் நீர்மத்தை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து, பின் அந்த நீரில் மீன சமைத்த பாத்திரத்தை 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் பாத்திரத்தில் இருந்து வெளிவரும் மீன் நாற்றத்தைப் போக்கலாம்.
எலுமிச்சை
எலுமிச்சையின் அற்புதமான நறுமணத்தைக் கொண்டு எளிதில் மீன் நாற்றத்தைப் போக்கலாம். அதற்கு எலுமிச்சை துண்டைக் கொண்டு மீன் சமைத்த பாத்திரத்தை தேய்த்து, 20 நிமிடம் கழித்து, பின் கழுவினால் பாத்திரத்தில் இருந்து வெளிவரும் மீன் வாசனையானது போய்விடும்.
வினிகர்
வினிகர் கூட மீன் நாற்றத்தைப் போக்க உதவும் பொருட்களில் ஒன்று. எனவே வினிகரைப் பயன்படுத்தி மீன் சமைத்த பாத்திரத்தை கழுவுங்கள். இதனால் மீன் நாற்றம் மட்டுமின்றி, பாத்திரத்தில் உள்ள கறைகளும் நீங்கிவிடும்.
பால்
பாத்திரத்தில் இருந்து வெளிவரும் மீன் நாற்றத்தை பால் கொண்டும் போக்கலாம். அதற்கு அந்த பாத்திரத்தை பாலில் 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
ஆரஞ்சு பழத்தின் தோல்
ஆரஞ்சு பழத்தின் தோலை நீரில் போட்டு கொதிக்க விட்டு, பின் அந்த நீரில் மீன் சமைத்த பாத்திரத்தை 30 நிமிடம் ஊற வைத்து, பின்பு டிஷ் வாஷ் நீர்மம் கொண்டு கழுவினால், மீன் நாற்றம் போய்விடும்.
ஆப்பிள்
மீன் சமைக்கும் முன்பு, அந்த பாத்திரத்தில் ஆப்பிள் துண்டுகளை தேய்த்து, பின் சமைத்தால், மீன் வாசனையானது பாத்திரத்தில் தங்காமல் இருக்கும்.