புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் ஆணையைப் பெறும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொஹுவல பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எதிர்பார்க்கிறது.
தற்போதைய அரசியலமைப்பு பல மாற்றங்களைக் கண்டுள்ளது, இறுதியாக 19வது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தற்போதுள்ள அரசியலமைப்பில் கூடுதல் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்க்கவில்லை.
மாறாக முற்றிலும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தவே எதிர்பார்கின்றோம்.
இதேவேளை, கடந்த அரசாங்கமும் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முற்பட்டது. பல ஆண்டுகளாக நீடித்த ஒரு செயல்முறையைத் தொடங்கியது.
எனினும், இந்த செயல்முறை ஒரு இறுதி முடிவை எட்டவில்லை. நாடாளுமன்றத்தின் முழு ஆதரவும் இல்லாததால் இந்த செயல்முறை இறுதி முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




















