பருவநிலை மாற்றத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்க்கொள்ளப்படாவிட்டால் இந்த நூற்றாண்டின் இறுதியில் பனிக்கரடி இனம் முழுவதும் அழிவை சந்திக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆர்க்டிக் துருவப்பகுதிகளில் மட்டுமே வாழும் துருவக்கரடிகள் என அழைக்கப்படும் பனிக்கரடி உலகின் அரியவகை விலங்கினங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அமெரிக்கா, கனடா, க்ரீன்லாந்து, நார்வே, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பரவியிருக்கும் ஆர்க்டிக் பகுதிகளில் சுமார் 25,000 பனிக்கரடிகள் வாழ்கின்றன.
கடல் பனிப் பாறைகளை தன் வாழ்விடமாக கொண்டுள்ள இந்த பனிக்கரடிகள், கடல் பனிப் பாறைகளின் ஓட்டைகள் வழியாக மேலே வரும் சீல்களை (கடல் நாய்கள்), மீன்கள் போன்றவற்றை வேட்டையாடி உண்டு வாழ்ந்து வருகின்றன.
பல ஆண்டுகளாக மனித தொந்தரவுகள் இல்லாத பனிப்பாறை பிரதேசங்களில் தனது வாழ்க்கையை சந்தோஷமாக நடத்தி வந்த இந்த பனிக்கரடிகளுக்கு மனித குலத்தால் உருவாக்கப்பட்டுள்ள பருவநிலை மாற்றம் மிகப்பெரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.
கால நிலை மாற்றம்:
தொழில்துறை வளர்ச்சி, நகரமயமாதல், சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றத்தால் ஆர்க்டிக் பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருகின்றன. இதன் காரணமாக தற்போது பனிக்கரடிகளுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் அவை அதிக அளவில் உயிரிழந்து வருவதோடு உணவுதேடி நகரங்களுக்குள் வலம் வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பனிக்கரடி இனம் முற்றுலும் அழிவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆர்க்டிக் பெருங்கடலில் பனிப் பாறைகள் சுருங்குவதால், சில துருவ கரடி உயிர்வாழும் விளிம்பில் இருப்பதாக British journal Nature Climate Change வெளியிட்டுள்ள அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. குறைவான பனிப் பாறைகள் இருப்பதால் தற்போது உணவுதேடி கரடிகள் அதிக தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன, எனவே தற்போதுள்ள பசுமை இல்ல வாயு உமிழ்வை உலகம் தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் துருவ கரடிகள் அனைத்துமே 2,100 ஆம் ஆண்டு வாக்கில் மறைந்துவிடும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 வருடத்திலேயே அழியும்?
இது குறித்து தெரிவித்துள்ள போலார் பியர்ஸ் இன்டர்நேஷனலின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஸ்டீபன் ஆம்ஸ்ட்ரூப்பின், புதிதாகப் பிறந்த துருவ கரடிகளின் உயிர்வாழ்வு விகிதம் குறையும், ஏனெனில் “பனிப்பாறை இல்லாத பகுதிகளில் உணவு கிடைக்காது என்பதால் பெண் கரடிக்கு பால் உற்பத்தி செய்யம் அளவுக்கு போதுமான உடல் கொழுப்பு இருக்காது என தெரிவித்தார்.
இருப்பினும் ரஷ்ய விலங்கியல் நிபுணர் நிகோலாய் ட்ரோஸ்டோவின் கூற்றுப்படி 2040 ஆம் ஆண்டுக்குள் இந்த பனிக்கரடி இனங்கள் முற்றிலும் அழியாலாம் என கணிக்கப்பட்டுள்ளது.