ஆண்டுதோறும் நோபள் பரிசு வென்றவர்களை கவுரவிக்க ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அரசகுடும்பம் சார்பாக வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா காரணமாக நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் டைனமைட் கண்டுபிடிப்பாளரான ஸ்விடனை சேர்ந்த ஆல்ஃப்ரெட் நோபலின் அறக்கடளை சார்பில் 1901 ஆம் ஆண்டு முதல் அறிவியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி போன்ற சில துறைகளில் சாதனைப் படைக்கும் நபர்கள் தேர்தெடுக்கப்பட்டு ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. உலகில் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றாகவும் இந்த நோபல் பரிசு பார்க்கப்பட்டு வருகிறது. அவ்வாறு ஆண்டுதோறும் நோபள் பரிசு வெல்பவர்களுக்கு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் விருது வழங்கப்பட்ட பிறகு, அரச குடும்பத்தை சேர்ந்த 1300 பேருடன், அவர்களுக்கு விருந்து வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நோபல் பரிசு பெற்றவர்களுக்கான விருந்து நிகழ்ச்சி நடைபெறாது என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வென்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள், இருப்பினும் ஸ்வீடன் அரச குடும்பத்தின் சார்பில் வழங்கப்படும் விருந்து நிகழ்ச்சி டிசம்பர் 10 அன்று நடத்தப்படாது என தெரிவித்துள்ளது.
1956 ஆம் ஆண்டுக்கு பிறகு நோபல் பரிசு வென்றவர்களுக்கான விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறை. முன்னதாக முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போதும் இந்த விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.