ஹூஸ்டனில் உள்ள சீன தூதரகம் மூடப்பட்டதற்கு பதிலடியாக சீனாவின் செங்டுவில் உள்ள அமெரிக்க துணைத்தூதரகத்தை மூட சீன அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகின் கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா, சீனாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் இரு நாட்டு உறவிலும் மோசமான சூழல் நிலவி வருகிறது. இதனிடையே ஹாங்காங்கில் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு எதிராக சீனர்களுக்கு விசா கட்டுப்பாட்டை விதித்திருந்த அமெரிக்கா நேற்று முந்தினம் ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் துணைத்தூதரகத்த மூட அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சிகளை ஹேக் செய்ய முயற்சி செய்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா விளக்கமளித்திருந்தது.
இதற்கு உடனடியாக எதிர்வினை ஆற்றிய சீனா, அமெரிக்காவின் நடவடிக்கை இரு நாட்டுகளின் உறவில் மோசமடையச் செய்துள்ளதாகவும் இதற்கு சீனா தக்க பதிலடி கொடுக்கும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் சீனாவில் தென்மேற்கு நகரமான செங்டுவில் செயல்பட்டு வரும் அமெரிக்கா துணைத் தூதரகத்தை மூட சீனா இன்று உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள சீன வெளியுறவுத்துறை,இந்த நடவடிக்கை அமெரிக்காவின் நியாயமற்ற செயலுக்கு முறையான மற்றும் தேவையான பதிலடி என தெரிவித்துள்ளது. சீனா-அமெரிக்க உறவுகளின் தற்போதைய நிலைமையை சீனா பார்க்க விரும்பவில்லை எனவும் , இவை அனைத்திற்கும் அமெரிக்கா தான் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளது. ஹூஸ்டன் நகர சீன தூதரகத்தை மூட அமெரிக்கா உத்தரவிட்ட 72 மணி நேரத்திற்குள் சீனா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.