பொறுப்புகளை ஒப்படைக்கக் கூடிய வலுமிக்க தலைவர்களை இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்புமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பொது மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நுவரெலியா ராகலையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சீர்குலைந்து போன அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் சென்று தொழில் வாய்ப்புகள் இன்றி கஷ்டப்படும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது விரைவில் அமைக்கப்பட உள்ள பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கடமை என கருதுகிறேன்.
ஐந்தாண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் ஒன்று எதிர்கால தலைமுறையினருக்காக இருக்கும் நாட்டின் வளங்களை விற்பனை செய்ய முடியாது என்பதை ஆட்சிக்கு வரும் அனைத்து அரசாங்கங்களும் நினைவில் வைத்து செயற்பட வேண்டும்.
சரியான கொள்கை இல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால், நாட்டுக்கு ஏற்படும் இப்படியான சேதங்களை தடுப்பதற்காக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 69 லட்சம் மக்கள் இணைந்து நிறைவேற்றிய சௌபாக்கிய நோக்கு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த மக்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும்.
இதேவேளை அச்சமின்றி பொறுப்புகளை ஒப்படைக்கக் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்ப வேண்டியது மக்களின் கடமையென அவர் தெரிவித்துள்ளார்.