ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றில் காலம் முழுவதும் பிரச்சினைகள் இருந்து வந்ததால் பிரச்சினைகள் என்பது கட்சிக்கு புதிய விடயமல்ல என கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினைகள் சம்பந்தமான வரலாறு குறித்து கருத்து தெரவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபகரும் இலங்கையின் முதலாவது பிரதருமான டி.எஸ்.சேனாநாயக்கவுக்கும் பிற்காலத்தில் நாட்டின் பிரதமராக பதவிக்கு வந்த எஸ்.டப்ளியூ. ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கும் இடையில் முதலாவது பிரச்சினை ஏற்பட்டது.
இதன் பின்னர் டட்லி சேனாநாயக்க மற்றும் சேர் ஜோன் கொத்தலாவவுக்கும் இடையில் இரண்டாவது பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக 1956 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் டட்லி சேனாநாயக்க போட்டியிடவில்லை.
எனினும் பின்னாளில் ஜோன் கொத்தலாவ கட்சியின் தலைமைத்துவத்தை கைவிட்டதன் காரணமாக டட்லி சேனாநாயக்க மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரானார்.
இதன் பின்னர் டட்லி சேனாநாயக்கவுக்கும் ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதை தவிர்ப்பதற்காக ஜே.ஆர். ஜெயவர்தன கட்சியின் உதவியை நாடினார்.
பின் டட்லி சேனாநாயக்கவும் ஆர். பிரேமதாசவுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. டட்லி சேனாநாயக்கவின் மறைவின் பின்னர் அது முடிவுக்கு வந்தது.
இதனையடுத்து ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கும் ருக்மன் சேனாநாயக்கவுக்கும் இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அதற்கு பின்னர் ஆர்.பிரேமதாசவுக்கும் லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திஸாநாயக்க ஆகிய குழுவினருக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதனடிப்படையில் சில பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதுடன்சிலர் புதிய கட்சிகளை ஆரம்பித்தனர். மிக சொற்பமான பிரச்சினைகளே தீர்க்கப்பட்டன.
இந்த நிலையிலேயே தற்போது பிரச்சினைகளை உருவாக்கியவர்கள் கட்சியில் இருந்து விலகிச் சென்று தனித்து போட்டியிடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.