அமெரிக்காவில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நாய் ஒன்று உயிரிழந்துள்ளது.
உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்புகளை தடுக்க உலக நாடுகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும் கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவற்றை பாதுக்காக்கும் நடவடிக்கைகளிலும் அந்தந்த நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அவ்வாறு அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாய் ஒன்று உயிரிழந்துள்ளது.
அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவைச் சேர்ந்த ராபர்ட் மற்றும் அலிசன் மஹோனி ஆகியோர் ஜெர்மன் செப்பர்ட் வகை நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். 7 வயதாகும் அந்த நாய்க்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபட்டது. இந்த நாய் தான் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நாயாகும்.
இதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர்கள் அந்த நாய்க்கு சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் அந்த நாய் மூச்சுவிட சிரமப்பட்டதோடு நாசியில் சளி தேங்கி, ரத்த வாந்தி எடுத்துவந்துள்ளது. பின்னர் நாயில் உடல்நிலை கவலைக்கிடமாக தொடங்கியது. இந்நிலையில் அந்த நாய் தற்போது உயிரிழந்துள்ளது.
இருப்பினும் கொரோனா வைரசால் மட்டுமே அந்த நாய் உயிரிழந்ததா என்பது தெரியவில்லை. இரத்த பரிசோதனைகள் நாய்க்கு நோய் எதிர்ப்பு மண்டலத்தின் லிம்போமா புற்றுநோய் இருந்திருக்கலாம் என காட்டுவதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே அமெரிக்காவில் இதுவரை 12 நாய்கள், 10 பூனைகள், ஒரு புலி மற்றும் சிங்கம் ஆகிய விலங்குகளுக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது