ஹாங்காங்கில் கொரோனா பரிசோதனை நடத்த 60 பேர் கொண்ட குழுவை சீனா அனுப்பி உள்ளது.
ஹாங்காங்கில் 3,512 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 34 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளை ஒப்பிடுகையில், இங்கு கொரோனா பாதிப்பு குறைவான நிலையில்தான் உள்ளது. ஆனால் கடந்த 11 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் மேலாக உள்ளது. இந்த நிலையில் இங்கு கொரோனா பரிசோதனையை அதிகரிக்கும் வகையில் 60 பேர் கொண்ட குழு செல்வதாக சீனா அறிவித்துள்ளது.
குவாங்டாங் மாகாணத்தில் உள்ள பொது மருத்துவமனை மருத்துவர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். முதல்கட்டமாக 7 சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஹாங்காங் செல்கின்றனர். கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக ஹாங்காங் அரசுக்கு சீனா உதவி செய்வது இதுவே முதல்முறை. ஆனால், கண்காணிப்பு நோக்கங்களுக்காக டி.என்.ஏ மாதிரிகளை சேகரிக்க இதை ஒரு வாய்ப்பாக சீனா பயன்படுத்திக் கொள்ளும் என்று உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் 1997-ம் ஆண்டு பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த ஹாங்காங், சீனக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இதையடுத்து “ஒரு நாடு, இரண்டு ஆட்சி” என்ற அடிப்படையில் இயங்கலாம் என சீனா உத்தரவாதம் அளித்தது. ஆனாலும் படிப்படியாக ஹாங்காங்கை சீனா ஆக்கிரமித்து விடும் என்று அங்குள்ளோர் அஞ்சுகின்றனர்.