தமிழீழம் கிடைத்தால் இந்திரா காந்திக்கு பலாலி விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பளிக்க திட்டமிட்டிருந்தேன். அதற்குள் அவரை கொன்று விட்டார்கள் என பிரபாகரன் வருந்தினார் என்ற தகவலை வெளியிட்டுள்ளார் சட்டத்தரணி ஆர்.இராதாகிருஷ்ணன்.
தமிழகத்தை சேர்ந்த சட்டத்தரணி ஆர்.இராதாகிருஷ்ணன் தமிழீழ விடுதலை போராட்டத்துடனும், விடுதலைப் புலிகளுடனும் நெருக்கமாக இருந்தவர். பாண்டி பஜார் துப்பாக்கிச்சூட்டு விவகாரத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் மற்றும் பிரபாகரனுடனான தனது உறவு குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார். நேற்று அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில்-
பழைய டைரியை நினைவுகளை குறித்த நூல் எழுதுவதற்காக புரட்டிப் பார்த்த போது விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்கள் 15-11-1984 காலகட்டத்தில் என்னிடம் சொன்ன கருத்து இன்னமும் என் செவிகளில் இருக்கின்றன. மேலும் நம் பணிகளுக்கு இதைவிட என்ன அங்கீகாரம் கிடைத்துவிடப் போகிறது என தோன்றுகிறது. அவர் சொன்னது என்னவென்றால், “அண்ணே எப்படியும் தமிழீழம் ஒருநாள் மலரும். எங்களுக்கு ஆதரவாக இருந்த இந்திய தலைவர்கள், முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் என அனைவரையும் யாழ்ப்பாணம் பாலாலி விமான நிலையத்தில் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பேன். மறைந்த பிரதமர் இந்திரா காந்தி அம்மாதான் தமிழீழத்தை துவக்கி வைப்பார் என்று நினைத்திருந்தேன், ஆனால் அதற்குள் அவர் படு கொடுமையாக கொல்லப்பட்டு விட்டார்.(இந்திரா காந்தி 31-10-1984 கொல்லப்பட்டார்)
இந்த பட்டியலில் அண்ணன் நெடுமாறன், நீங்கள், எங்களுக்கு ஆதரவாக இருந்த பத்திரிக்கையாளர் உங்கள் தோழி அனிதா பிரதாப் போன்றவர்கள் பலர் எந்தப் பதவியில் இல்லை என்றாலும் உங்களையும் சிகப்பு கம்பளத்தில் தான் வரவேற்பேன், கட்டித் தழுவுவேன். இது என்னுடைய அவா’’ என்று அவர் சொன்னதை படித்த போது கண்களில் கண்ணீர் வந்தது.
இதைவிடவா கிடைத்தும் கிடைக்காமல் சில புண்ணியவான்களால் தடுக்கப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர் பதவிகள் வேண்டும். சிலர் இன்று நம்மை எளிதாக துச்சமாக நினைத்தாலும் 35 ஆண்டுகள் முன்பு ஒரு தேசிய தலைவர் சொன்னதை விட வேறு அங்கீகாரம் என்ன வேண்டும். இது போதும். எனக்கு எந்த இழப்பும் இல்லை.இதை என் நேர்மையான உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாய் நினைக்கின்றேன் என்றுள்ளது.