மலையகத்தில் உள்ள இளைஞர் யுவதிகள் என்னை சந்தித்து பேசவேண்டுமானால் தரகர்களை அழைத்து வரவேண்டாம். இளைஞர் யுவதிகள் நேரடியாக என்னை வந்து சந்தித்தால் உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுகொடுக்க முடியுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நாவலபிட்டியில் இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கண்டி மாவட்ட வேட்பாளர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றவுடன் மலையகத்தில் படித்து விட்டு தொழில் இல்லாமல் இருக்கின்ற அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் என்னால் தொழில் வாய்பினை பெற்று கொடுக்க முடியும்.
நான் சொல்வதை செய்பவன் மக்கள் தொடர்ந்தும் லயன் அறைகளில் வாழுகின்ற கலாசாரத்தினை நாம் மாற்றியமைக்க வேண்டும். இது தொடர்பில் நான் ஜனாதிபதியிடம் கலந்துரையாடியுள்ளேன். நான் அமைச்சராகிய பிறகு தோட்டப் பகுதி ஒன்றுக்கு நூறு வீடுகளை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.
கடந்த அரசாங்கத்தின் போது வீடும் காணியும் மாத்திரம் வழங்கப்பட்டது. ஆனால் எமது அரசாங்கத்தில் அனைத்து வசதிகளையும் பூர்திசெய்தே வழங்கப்படும் என குறிப்பிட்டார்.