2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நான்கு சிறிய கட்சிகளுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைக்க தயாராகி வருவதாக தெரியவருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொகுதிவாரியாக 128 ஆசனங்களை கைப்பற்றியதுடன் தேசிய பட்டியல் மூலம் 17 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது. மொத்தமாக அந்த கட்சி 145 நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இரண்டு உறுப்பினர்கள், பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒரு உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொண்டு ஒரு ஆசனம், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் ஒரு ஆசனம் மற்றும் அத்துரலியே ரதன தேரர் தலைமையிலான எமது மக்கள் சக்தி கட்சி தேசிய பட்டியலில் பெற்ற ஆசனம் ஆகியவற்றுடன் 151 என்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்தால், இந்த நிலைமையில் மேலும் மாற்றம் ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.